12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அடுத்த மாதம் தடுப்பூசி: ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா 3ம் அலை ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அடுத்த மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா கூறி உள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டது. தற்போது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரையில் 18 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர் என 44 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை கடுமையான உயிர் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், 3ம் அலை செப்டம்பர் அல்லது அக்டோபரில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கு முன்பாக தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரித்தால் மட்டுமே, கடுமையான பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா 3வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என சில ஆய்வு முடிவுகள் கூறுவதால், பெற்றோர் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

எனவே, 3ம் அலைக்கு முன்பாக குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாராகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா நேற்று அளித்த பேட்டியில், ‘அடுத்த மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட வாய்ப்புள்ளது,’ என கூறி உள்ளார். முதல் கட்டமாக 12 - 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க அனுமதி தரப்படும் என கூறப்படுகிறது. குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை 3 கட்டங்களாக நடந்து வருகிறது.

முதல் பரிசோதனை 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கும், 2வது பரிசோதனை 6 முதல் 12 மற்றும் 3வது பரிசோதனை 2-6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நடத்தப்படுகிறது. முதல் 2 கட்ட பரிசோதனைகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 2-6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பரிசோதனையில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், கோவாக்சின் தடுப்பூசியை சிறுவர்களுக்கு செலுத்த அவசர கால அனுமதி வழங்கப்படலாம் என தெரிகிறது.

இதுமட்டுமின்றி, சைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரித்துள்ள ஜைகோவ்-டி தடுப்பூசி குழந்தைகளுக்கும் செலுத்தக் கூடியது. இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்துவதற்கான பரிசோதனை முடிவுகளுடன் அவசரகால அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது. எனவே, பைசருக்கு அனுமதி தரப்பட்டால், அந்த தடுப்பூசி சிறுவர்களுக்கு செலுத்துவதில் முக்கியத்துவம் தரப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

* ஆக்சிஜன் இறப்புகள்: அறிக்கை தர உத்தரவு

கொரோனா 2ம் அலையில் மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் ஒருவர் கூட இறக்கவில்லை என ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கூறியது பெரும் சர்ச்சையானது. இதுவரை எந்த மாநில அரசுகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் ஏற்பட்டதாக அறிக்கை தரவில்லை என ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என்பது குறித்து ஆகஸ்ட் 13ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தருமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

Related Stories:

>