பொதுமக்களை சிந்திக்க வைக்கும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஓவியங்கள்: பாலியல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய நடவடிக்கை

நாகர்கோவில்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. நம் நாட்டில் 15 நிமிடத்துக்கு ஒரு சிறுமி பலாத்காரம் செய்யப்படுவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. பாலியல் வன்முறை குற்றங்களில் 3ல் ஒரு பங்கு குற்றங்கள் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாகும். வட மாநிலங்களில் மிக அதிகளவில் அரங்கேறி வந்த குழந்தைகள் பாலியல் வன்முறை சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பொறுத்தமட்டில் உத்தரபிரதேசம் (14 சதவீதம்), மராட்டியம், மத்திபிரதேசம் (13 சதவீதம்), மேற்கு வங்காளம் (6 சதவீதம்), ஒடிசா (5 சதவீதம்) ஆகிய 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.

கடுமையான சட்டங்கள் மூலம் தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் ‘போக்சோ சட்டம் (2012)’ ஏற்கனவே அமலில் இருந்தபோதிலும், ஆண்டுக்கு ஆண்டு பாலியல் குற்றங்கள் அதிகரித்து வந்தது. இதைத்தொடர்ந்து, குற்றப்பிரிவு சட்டம், சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை செய்து அவசர சட்டம் பிறப்பித்தது.

இந்த அவசர சட்டத்தின்படி, 12 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கப்படும். கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனையோ அல்லது தூக்கு தண்டனையோ விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும். 16 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்தால் வாழ்நாள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும். 16 வயதுக்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான குறைந்தபட்ச சிறை தண்டனை 10 ஆண்டாக அதிகரிக்கப்ப்பட்டுள்ளது.

அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மேல்முறையீட்டு மனுக்களை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவும் இந்த அவசர சட்டம் வகை செய்கிறது. வெறும் சட்டங்கள் மற்றும் தண்டைகளால் மட்டும் இதை குறைத்து விட முடியாது என்பதால், இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்கின்றன.  தமிழ்நாட்டிலும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல  பிரிவுகள், 1098 சைல்டு லைன் அமைப்பினர், சமூக நலத்துறை, குழந்தைகள், ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என பல்வேறு துறையினருடன், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்களும்  இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் தற்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறும்படங்கள், ஊர்வலங்கள், கருத்தரங்குகள், துண்டு பிரசுரங்கள் வினியோகம் உள்ளிட்டவை தவிர தற்போது இது தொடர்பான சுவர் விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் மாநகராட்சி சார்பில்  நாகர்கோவில் மாநகரில் உள்ள அரசு சுவர்கள், தனியார், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சுவர்களில் இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பெண் குழந்தைகளை மதிக்க வேண்டும். பெற்றோர்களே ஆண் குழந்தைகளுக்கு கற்று கொடுங்கள். பெண் குழந்தைகளை போற்ற வேண்டும் என்பது தொடர்பான பல்வேறு வாசகங்கள் வெகுவாக கவர்ந்துள்ளன. வெறும் தண்டைகளால் மட்டும் தவறுகளை குறைத்து விட முடியாது. விழிப்புணர்வுகளும் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு துறைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உண்மையில் பாராட்டக்குரியதாகும்.

Related Stories: