கர்நாடக மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை தேர்வு: நாளை பதவியேற்பு என தகவல்

பெங்களூரு: கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநில முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற நாள் முதல், சில பாஜ மூத்த எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வந்தனர். சொந்த கட்சி எம்எல்ஏகளை புறக்கணித்து பிற கட்சியில் இருந்து வந்த 50 சதவீத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கொடுத்துள்ளதால், தங்கள் எதிர்ப்பை காட்டினர். சில மூத்த எம்எல்ஏகள் மவுனமாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய விஜயபுரா நகரம் தொகுதி எம்எல்ஏவுமான பசனகவுடா பாட்டீல், ஆர்.யத்னால் வெளிப்படையாகவே எடியூரப்பா மீது கடுமையான விமர்சனங்களை கூறினார்.

அவருக்கு ஆதரவாக சில மூத்த எம்எல்ஏகள் இருந்தனர். மாநில பாஜவில் ஆட்சி தலைமை மாற்றம் செய்ய வேண்டும் என்று சிலர் கட்சி தலைமையிடம் லாபி நடத்தினர். அதற்கு பணிந்த பாஜ மேலிடம், வயதை காரணம் காட்டி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் படி எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்தது. கட்சி தலைமையின் உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து தனது முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமாவை அங்கிகரித்துள்ள மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட், புதிய அரசு அமையும் வரை பொறுப்பு முதல்வராக இருக்கும்படி எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டார்.

மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளதால், புதிய அரசு அமைய வசதியாக பாஜ எம்எல்ஏகள் கூட்டம் நடத்த வேண்டும். இதில் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்ய வேண்டும். அவர் முறைப்படி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கடிதம் கொடுக்க வேண்டும். இப்படி பல வழிமுறைகள் பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது. புதிய முதல்வர் தேர்வு செய்வது தொடர்பாக இன்று காலை டெல்லியில் பாஜ உயர்நிலைக் குழு கூட்டம் நடந்தது. அதில் யாரை முதல்வராக நியமித்தால் ஆட்சி சுமூகமாக இயங்குவதுடன் கட்சி வளர்ச்சிக்கும் துணையாக இருக்கும் என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறார்கள்.

முதல்வர் பதவி போட்டியில் சபாநாயகர் விஷ்வேஷ்வர ஹெக்டே காகேரி, பி.எல்.சந்தோஷ், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநில முன்னாள் அமைச்சர்கள் முருகேஷ்நிராணி, சி.டி.ரவி, பாஜ எம்எல்ஏ அரவிந்த பெல்லத் உள்பட பலரின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது. இதில் முருகேஷ் நிராணி மற்றும் அரவிந்த பெல்லத் ஆகியோரை முதல்வராக்க பெரும்பான்மையான பாஜ எம்எல்ஏகள் விரும்பவில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாகவும் உயர்நிலை குழுவில் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மற்றவர்கள் தங்களுக்குத் தெரிந்த ஆட்கள் மூலமும், ஆர்எஸ்எஸ் மூலமாகவும் முதல்வர் பதவியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் சட்டமன்ற கட்சி தலைவர் தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசிக்க பாஜ மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தலைமையில் மேலிட பார்வையாளர்கள் தர்மேந்திர பிரதான், பியூஷ்கோயல், பூபேந்திரயாதவ் ஆகியோர் இன்று மாலை பெங்களூரு வந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பசவராஜ் பொம்மை ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கர்நாடக முதல்வராக நாளை பசவராஜ் பொம்மை பதவியேற்பு என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: