குமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை; படகுகளை சீரமைக்கும் பணி மும்முரம்: பெயின்ட் அடித்து அழகுபடுத்துகின்றனர்

குளச்சல்: மீன்களின்  இனப்பெருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க மத்திய அரசு 60 நாள்  தடை விதித்து உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. குமரி கிழக்கு கடற்கரை பகுதியாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும்  ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன்15ம் தேதிவரை கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல் மேற்கு கடற்கரை பகுதியான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை  கிராமங்களில் மே 31ம் தேதி நள்ளிரவு முதல் ஜூலை 31 ம் தேதிவரை விசைப்படகுகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த ஏப்ரல் 15ம் தேதி கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. பின்னர் ஜூன் 15ம் தேதியுடன் தடை நீங்கியது. கிழக்கு கடற்கரை பகுதியில் தற்போது விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த மே மாதம் 31ம் தேதி  நள்ளிரவு முதல் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை அமலில் இருந்து வருகிறது. கரை திரும்பிய குளச்சல் பகுதி விசைப்படகுகள் மீன் பிடித்துறைமுகத்தில்  நிறுத்தப்பட்டு உள்ளன.

இந்த தடைக்காலம் வரும் 31ம் தேதி நள்ளிரவுடன் நீங்குகிறது. ஆகஸ்டு 1ம் தேதி முதல் விசைப்படகுகள் வழக்கமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லும்.

தடை நீங்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில்   விசைப்படகு உரிமையாளர்கள் தங்களது படகுகளை தீவிரமாக  பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகளில் இன்ஜின்களை பொருத்துவது, பெயின்டு அடிப்பது, பேட்டரி, ஒயரிங், வலைகளை சீரமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்களும் உற்சாகமடைந்து உள்ளனர்.

Related Stories:

>