கேரளாவில் குறையாத பாதிப்பு: கொரோனா பரிசோதனை செய்தால் ரூ5 ஆயிரம், பிரியாணி இலவசம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடு இல்லை. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு பிரியாணி, ரூ.5 ஆயிரம் பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பால் ஏராளமானோர் பரிசோதனைக்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா பாதிப்பு இன்று வரை குறைந்தபாடு இல்லை. தொற்று சதவீதம் 10ல் இருந்து குறையாமல் நீடித்து வருகிறது. இதேபோல் மரண எண்ணிக்கையும் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று 1,09,382 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11,586 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று சதவீதம் 10.59 ஆகும். மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய 5 மாவட்டங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதேபோல் சிகிச்சையில் இருந்த 135 பேர் மரணமடைந்து உள்ளனர். இதுவரை மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,170 ஆக உயர்ந்து உள்ளது. 14,912 பேர் நேற்று குணமடைந்தனர். தற்போது 1,36,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் நோய் பரவல் அதிகமாக இருக்கிறது. ஆகவே மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தினமும் 2000க்கு மேற்பட்டவர்களுக்கு நோய் பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் எந்த பலனும் ஏற்படவில்லை. இங்கு கொரோனா பரிசோதனைக்கு யாரும் வருவதில்லை. இந்த நிலையில் பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் மலப்புரத்தை சேர்ந்த பஞ்சாயத்து கவுன்சிலர் ஒருவர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பரிசோதனைக்கு வருகிறவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பிரியாணி வழங்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதை தனது வாட்ஸ் அப் மூலம் அந்த பகுதி முழுவதும் பரப்பினார்.

இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பரிசும், 5 பேருக்கு பிரியாணியும் வழங்கப்படும் என்று அறிவித்தது. இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து நேற்று பரிசோதனைக்கு ஏராளமானோர் திரண்டனர்.

தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு

கேரளாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மையங்களில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தும் தடுப்பூசி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது: கேரளா முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஆகவே திருவனந்தபுரம், கொல்லம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் தடுப்பூசிகள் அனுப்பி வைக்க ஒன்றிய அரசிடம் கேட்டு இருக்கிறோம். அடுத்த மாதம் கேரளாவுக்கு 60 லட்சம் டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது என்றார்.

Related Stories: