12- 18 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது ஆகஸ்ட் மாதம் தொடங்க வாய்ப்பு : ஒன்றிய அரசு தகவல்

டெல்லி:  12- 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்மாண்டவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் 3வது அலை அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் தொடங்கும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர். இதற்கிடையே முதல் அலையில் பெரியவர்கள், இரண்டாவது அலையில் நடுத்தர வயதினர் அதிகம் தாக்கப்பட்டதால் 3வது அலையில் குழந்தைகளை தாக்கக் கூடும் என்ற உறுதிப்படுத்தப்படாத கணிப்புகள் உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான மருத்துவ சோதனைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற  பா.ஜ.க., எம்.பி.,க்கள் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அடுத்த மாதம் (ஆகஸ்டு) குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், 12 வயதில் இருந்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் மேலும் பல நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதற்கான உரிமம் பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

உலகிலேயே அதிக அளவு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நாடாக இந்தியா விரைவில் உருவெடுக்கும் என்று கூறிய அவர்,மரபணுக்கூறு அடிப்படையிலான தடுப்பூசியை சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்து குழந்தைகளுக்கு பரிசோதித்துள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் மாத தொடக்கத்தில், நாட்டில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வாய்ப்புள்ளதாக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், மத்திய அமைச்சர் ஆகஸ்டில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: