கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு மகளுடன் பெண் வக்கீல் தூக்கிட்டு தற்கொலை: கடன் பிரச்னையா? - நிலத் தகராறா? போலீஸ் விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெண் வழக்கறிஞர் தனது மகளுடன் ஒரே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு  கடன் பிரச்சினையா? அல்லது நிலத்தகராறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கீதா அஞ்சலி (50). வழக்கறிஞர். இவரது கணவர் ராமு கடந்த  10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களது  மகள் சிவரஞ்சனி  (24). பி. காம். பட்டதாரி.  வழக்கறிஞர் தொழில் செய்து வந்த கீதா அஞ்சலி மகள் படிப்பிற்காக அக்கம்பக்கத்தில் கடன் வாங்கியிருந்தாராம். கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் முடக்கத்தால் போதிய வருமானம் இல்லாமல் தவித்த அவர், கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். 

மேலும், இவரது நிலம் சம்பந்தமாகவும் பிரச்சினை உள்ளதாம்.  இந்நிலையில், இன்று காலை வெகுநேரமாகியும் அவரது வீடு திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, வழக்கறிஞர் கீதா அஞ்சலியும், மகள் சிவரஞ்சனியும் ஒரே மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவம் குறித்து கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லையால் இறந்தனரா அல்லது சொத்து தகராறு காரணமாக இறந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: