கோவையில் பயங்கரம் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி: மனைவி உட்பட 6 பேர் கைது

கோவை: கோவை ஒண்டிப்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் சேதுராஜாராம் சிங்(29). இவர் பிரவுசிங் சென்டர் நடத்தி வருகிறார். இவரது காதல் மனைவி சவுந்தர்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சவுந்தர்யா இஎஸ்ஐ மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், அங்கு ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றிய குணசேகர்(23) என்பவருடன் சவுந்தர்யாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இது தெரிந்ததும் சேதுராஜாரம் சிங் மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சவுந்தர்யா கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.  சேதுராஜாராம் தனியாக வசித்து வருகிறார். மனைவியின் நடவடிக்கையால் மன உளைச்சலில் இருந்த, சேதுராஜாராம், சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கணவன் இருக்கும் வரை தன்னால் கள்ளக்காதலனுடன் விருப்பம்போல் உல்லாசம் அனுபவிக்க முடியாது என நினைத்த சவுந்தர்யா, அவரை தீர்த்துக்கட்டி விடலாம் என முடிவு செய்து, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கத்தியை வாங்கி வைத்துள்ளார். அவர்கள் சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு மனைவியை தனது வீட்டுக்கு வரவழைக்க சேதுராஜாராம் சிங் தான் விஷம் குடித்துவிட்டதாக போன் செய்ததாக கூறப்படுகிறது. இதை தனக்கு சாதகமாக கருதிய சவுந்தர்யா கணவர் வீட்டுக்கு செல்லும் முன், தனது கள்ளக்காதலன் குணசேகர், தனது தம்பியான 17 வயது சிறுவன் ஆகியோருக்கு போன் செய்து தனது கணவரை கொல்ல இதுதான் சரியான சந்தர்ப்பம் உடனே வாருங்கள் என கூறியுள்ளார். அவர்களும் அவரது நண்பர்கள் 4 பேருடன் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அங்கு சென்றுள்ளனர். அப்போது சவுந்தர்யா, உட்பட 6 பேரும் சேதுராஜாராம் சிங்கின் கை, கால்களை பிடித்துக்கொள்ள குணசேகர் அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். அவர் வலியால், அலறியுள்ளார்.  

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துவிடுவார்கள் என அனைவரும் பயத்தில் சென்று விட்டனர். இதில், குணசேகருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து வலியால் துடித்த கணவரை சவுந்தர்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தவறுதலாக கழுத்தில் கத்தி பட்டு காயம் ஏற்பட்டது என கூறி டாக்டர்களிடம் நாடகமாடி சேர்த்துள்ளார். ஆனால் டாக்டர்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சேதுராஜாராம் சிங் அங்கிருந்தவர்களிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளார். அதன்பேரில், சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து கழுத்தை அறுத்து கணவனை கொல்ல முயன்ற சவுந்தர்யா(25), உடந்தையாக இருந்த கள்ளக்காதலன் குணசேகர்(23), மதன்குமார்(18), சவுந்தர்யாவின் தம்பி 17 வயது சிறுவன், மற்றும் அவனது நண்பர்கள் 16, 17 வயது சிறுவர்கள், என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், மற்றவர்கள் கோவை மத்திய சிறையிலும் அடைத்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவரை கொல்ல முயன்ற சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>