திருடன் என நினைத்து நள்ளிரவில் பெட்ரோல் பங்குக்குள் வந்த வாலிபரை கொளுத்திய கும்பல்: புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, மேட்டுப்பாளையம், வழுதாவூர் சாலையில் வசிப்பவர் ராஜமெளரியா (23). இவர் மேட்டுப்பாளையம் சந்திப்பில் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். இவரது பெட்ரோல் பங்கிற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவர் மீது சந்தேகமடைந்த பங்க் ஊழியர்களான சிவக்குமார் (19), குமார் (47) ஆகியோர் முதலில் திருடன் என நினைத்து அவரை மறித்து விசாரித்துள்ளனர். தகவலறிந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜமெளரியா மற்றும் அவரது தம்பி ராஜவரதன் (21) ஆகியோர் வந்து அவரிடம் விசாரித்தனர். தான் வெளியூரைச் சேர்ந்தவன் என்றும், ஓரமாக படுத்து தூங்குவதற்காக பங்கிற்கு வந்ததாகவும், திருட வரவில்லை எனவும் அவர் கூறியதாக தெரிகிறது. அப்போது ராஜமெளரியாவின் நண்பர்கள் வெற்றி, சீதாராமன் என்ற சிவா, பிரசாந்த் ஆகியோரும் அங்கு வந்து விசாரித்துள்ளனர். திருட வரவில்லை என்றால் பில்லி சூனியம் வைக்க வந்தாயா? என மாறிமாறி கேட்டுள்ளனர். பின்னர் அந்த வாலிபரை மிரட்டுவதற்காக, பெட்ரோலை எடுத்து அவர் மீது ஊற்றியுள்ள அவர்கள், கொளுத்துவதுபோல் தீக்குச்சியைப் பற்ற வைத்துள்ளனர். அப்போது தீப்பொறி அந்த வாலிபர் மீது  பற்றியது. இதில் அவரது வயிற்றுப் பகுதியில் தீப்பிடித்து எரியவே, பதற்றமடைந்த பங்க் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், நண்பர்கள் அங்கிருந்த தீயணைப்பு சாதன கருவிகளை எடுத்து பயன்படுத்தி உடனே தீயை அணைத்தனர். 

இதையடுத்து அங்கிருந்து வயிற்றில் தீக்காயத்துடன் கதறியபடி தப்பிய அந்த வாலிபர், கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு தனக்கு நடந்த சம்பவத்தை கூறிய நிலையில், உடனே ஆம்புலன்சில் அங்கிருந்த டாக்டர்கள் அவரை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தீக்காயமடைந்த வாலிபரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். அப்போது அவர், திருச்சியை சேர்ந்த சதீஷ்குமார் (31) என்பதும், வேலை தேடி புதுச்சேரி வந்திருப்பதும் தெரியவந்தது. சம்பவத்தன்று நள்ளிரவு மழையில் இருந்து தப்பிக்க பெட்ரோல் பங்க் ஓரமாக படுத்து தூங்க சென்றதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சதீஷ்குமாரிடம் புகாரை பெற்ற காவல்துறை, ராஜமெளரியா, அவரது தம்பி ராஜவரதன், ஊழியர்கள் சிவசங்கர், குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: