பல ஆயிரம் கோடி வங்கிக் கடன் மோசடி; தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவராக அறிவிப்பு: லண்டன் நீதிமன்றம் அதிரடி

லண்டன்: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் ரூ.14 ஆயிரம் கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று அதிரடியாக முடக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், பல ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, ‘திவால் ஆனவர்’ என்று லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பால் வங்கிகள் தங்களது பணத்தை மீட்டெடுக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, காா்ப்பரேஷன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்டவற்றில் கடன் வாங்கிய தொழிலதிபா் விஜய் மல்லையா (65), அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றாா். அவர் வாங்கிய கடனுக்காக கடந்த 2013ம் ஆண்டிலிருந்து 11.5 சதவீத கூட்டு வட்டியை வங்கிகள் விதித்து வருகின்றன. அசலுடன் வட்டியையும் சோ்த்து விஜய் மல்லையா திரும்பி அளிக்க வேண்டும் என்று வங்கிகள் கோரி வருகின்றன. 

இந்தியாவில் உள்ள விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. அச்சொத்துகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தப் பாதுகாப்பை ரத்து செய்வதற்கு அனுமதி கோரி லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் இந்திய வங்கிகள் தரப்பில் கோரப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கில், விஜய் மல்லையாவின் சொத்துகள் மீதான பாதுகாப்பை அகற்றவும், சர்வதேச அளவிலான சொத்துகளை முடக்கவும் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், விஜய் மல்லையாவுக்கு எதிராக திவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அவரது சொத்துக்களை முடக்க இந்திய வங்கிகளுக்கு நிபந்தனையற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் விஜய் மல்லையாவுக்கு கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு, இது மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வங்கிகள் கடனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இருந்தும், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வருதல் தொடர்பாக இருந்த சட்டச் சிக்கல்கள் தீர்ந்த நிலையில், தற்போது நீதிமன்றத்தின் உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

விரைவில், அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரத்தில், விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இதை விஜய்மல்லையாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், விஜய் மல்லையா நேற்றிரவு வெளியிட்ட தனது டுவிட்டர் பதிவில், ‘ரூ.6,200 கோடி கடனுக்காக, அரசு வங்கிகளின் உத்தரவின் பேரில் ரூ.14,000 கோடி மதிப்புள்ள எனது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதாவது, ரூ.9,000 கோடி ரூபாயை ரொக்கமாகவும், ரூ.5,000 கோடிக்கும் மேலானவற்றை அசையாக சொத்துகளாகவும் உள்ளன. அமலாக்கத்துறையிடம் பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்பதால், வங்கிகள் என்னை திவாலாக்குமாறு கோருகின்றன. நம்பமுடியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: