அதிமுக பிரமுகர் ஆக்கிரமித்துள்ள கோயில் நிலத்தை மீட்கக்கோரி செல் டவரில் ஏறி பூசாரி போராட்டம்

இலுப்பூர்: விராலிமலை அருகே கோயில் இடத்தை ஆக்கிரமித்து அதிமுக பிரமுகர் அமைத்துள்ள கீற்று கொட்டகையை அகற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி பூசாரி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொத்தப்பட்டியை சேர்ந்தவர் ராசு(60). இவர் அந்த பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் பூசாரியாக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர்(40). அதிமுக முன்னாள் கிளை செயலாளர்.

இவர் தனது வீட்டின் அருகே உள்ள முத்து மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கீற்று கொட்டகை அமைத்திருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் சுதாகர் வீட்டுக்கு கோயில் பூசாரி ராசு மற்றும் பொதுமக்கள் சென்று கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அமைத்துள்ள கீற்று கொட்டகையை அகற்றுமாறு கூறினர். இதற்கு சுதாகர் மறுத்து விட்டார். இந்நிலையில் விராலிமலை அருகே கொடும்பாளூரில் அருகருகே 2 செல்போன் டவர் உள்ளது.

இதில் ஒரு டவரில் இன்று காலை 6.30 மணியளவில் பூசாரி ராசு ஏறினார். 100 அடி உயரமுள்ள டவரில் பாதிதூரம் ஏறி உட்கார்ந்து விட்டார். இதை பார்த்து செல்போன் டவர் முன் பொதுமக்கள் கூடினர். இந்த தகவல் கிடைத்ததும் விராலிமலை போலீசார் மற்றும் இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வருமாறு ராசுவிடம் கூறினர். அப்போது கோயில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்து போடப்பட்டுள்ள கீற்று கொட்டகையை அகற்றினால் தான் கீழே இறங்குவேன் என்று ராசு பிடிவாதம் பிடித்தார்.

பின்னர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன், டவரின் மேலே ஏறி ராசுவை கீழே இறக்கினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கொத்தப்பட்டியில் ஆக்கிரமிப்பு செய்து கீற்று கொட்டகை அமைத்துள்ள கோயில் இடத்தை போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>