வீட்டை விட்டு வெளியே விரட்டி விட்டார் 2வது மகன் மிரட்டி எழுதி வாங்கிய நிலத்தை மீட்டு தர வேண்டும்-திருப்பத்தூர் கலெக்டரிடம் 90 வயது முதியவர் மனு

திருப்பத்தூர் : இரண்டாவது மகன் மிரட்டி எழுதி வாங்கிய நிலத்தை மீட்டு தர வேண்டும் என 90 வயது முதியவர் திருப்பத்தூர் கலெக்டரிடம் மனு அளித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த சின்னகந்திலி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வீரப்பன்(90). இவர் தனது பேரனுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் அமர் குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:விவசாய தொழில் செய்து வந்த எனக்கு தேவராஜ்(66), நாகராஜன்(64), ராஜமாணிக்கம்(62) என 3 மகன்களும், ராஜேஸ்வரி(65), பச்சையம்மாள்(60), பாஞ்சாலி(58), பெரியபாப்பா(55) என 4 மகள்களும் உள்ளனர். மேலும், எனக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் சின்ன கந்திலி பகுதியில் உள்ளது.இந்நிலையில், 2வது மகன் நாகராஜன் வீட்டில் நான் சில காலம் வசித்து வந்தபோது, அவர் என்னை மிரட்டி 1 ஏக்கர் 31 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு எழுதிக்கொண்டார். இதனால் மற்ற 2 மகன்களும், 4 மகள்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, என்னை மிரட்டி  எழுதி வாங்கிய நிலத்தை மீட்டு தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல, வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம், ரங்கன்வட்டம் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி(30) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கும், ஆலங்காயத்தைச் சேர்ந்த பெரியண்ணன்(33) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. எங்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், கணவர் எனக்கு தெரியாமல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். இதை நான் தட்டிக்கேட்டதால் அவர் என்னை அடித்து துன்புறுத்தி என் மகள்களை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல் என விரட்டிவிட்டார்.

ஆதரவற்ற நிலையில் நான் தற்போது தனியாக உள்ளேன். எனவே, எனக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்த எனது கணவரிடம் விசாரித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தவிர ஏராளமான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் கொண்டு வந்த மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட்டு விட்டு சென்றனர்.

Related Stories: