திருவலம் அருகே சேர்க்காட்டில் சுற்றுச்சுவர் இடிந்து புதர்மண்டிய அரசு பள்ளி-சீரமைக்க பெற்றோர் கோரிக்கை

திருவலம் : திருவலம் அடுத்த சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி சென்னை- சித்தூர் தேசிய நெடுஞ்சாலையோரம் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்றும், 40 ஆசிரிய, ஆசிரியைகளும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு முதல் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. கடந்த வாரம் முதல் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அரசு அறிவித்தது. இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க நாள்தோறும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு பெற்றோர்கள் வந்து செல்லும்போது பள்ளி வளாகத்தில் புதர் மண்டி இருப்பதும், அதில் விஷ ஜந்துக்கள் உள்ளதா என அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

மேலும் பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளதால் பள்ளியில் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க அச்சம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியரிடம் பெற்றோர்கள் புகார் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகம் மற்றும் சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: