வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் 2ம் நிலை காவலர்களுக்கு உடற்தகுதி தேர்வு தொடங்கியது-முதல் நாளில் 413 பேர் பங்கேற்பு: 87 பேர் ஆப்சென்ட்

வேலூர் :  வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் 2ம் நிலை காவலர்களுக்கு உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 413 பேர் பங்கேற்றனர். 87 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் சார்பாக இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10,906 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி நடந்தது. இதையடுத்து உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 21ம்தேதி முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கொரோனா 2ம் அலை அதிகமாக பரவியதால் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் ஜூலை 26ம்தேதி (நேற்று) உடற்தகுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 80 பேர் 2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். அதில் 2 ஆயிரத்து 393 ஆண்கள், 687 பெண்கள். இவர்களுக்கு உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி ஸ்ேடடியத்தில் நேற்று காலை தொடங்கியது. இதற்காக அதிகாலை முதலே இளைஞர்கள் குவிந்தனர். பின்னர் அவர்களை உடல் வெப்ப நிலை, கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் சரி பார்த்த பின்னர் ஸ்ேடடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கல்வி சான்றிதழ், உயரம், எடை அளவீடுதல், தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் போட்டிகள் நடத்தப்பட்டது. இவை அனைத்தும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. இப்பணிகளை எஸ்பி செல்வகுமார், சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷனி மேற்பார்வையிட்டனர்.  

இதில் தேர்வு செய்யப்படுவர்கள் நீளம் அல்லது உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் போன்ற தேர்வுகள் வரும் வாரங்களில் நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்று தொடங்கிய காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு வரும் 30ம்தேதி வரை ஆண்களுக்கும், 1ம் தேதி தொடங்கி 3ம்தேதி வரை பெண்களுக்கும் நடக்கிறது. ஒரு நாளைக்கு 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று 500 பேரில் 413 பேர் கலந்து கொண்டனர்.

இதில் 86 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வெளியேறினர். 87 பேர் ஆப்சென்ட் ஆகினர். ஆப்சென்ட் ஆனவர்களுக்கு மற்றொரு முறை வாய்ப்பு வழங்கப்படாது. நேற்று உடற்தகுதி தேர்வு அழைக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அவருக்கு மட்டும் உடற்தகுதி தேர்வு வேறு தேதியில் தேர்வு நடைபெறும்’ என்றனர்.

Related Stories: