பூதாகாரமாகும் முறைகேடு புகார்!: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நிறுவன ஆலோசகர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு..!!

சென்னை: அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நிறுவன ஆலோசகராக செயல்பட்டு வரும் ரவிக்குமார் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் இருந்தபோது வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி டெண்டரை விடுவதில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கோடிக்கணக்கில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை தொடர்ந்து, கடந்த 22ம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கரூர் வீடு, சென்னையில் உள்ள வீடு என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்திலும் அதேபோல் மாம்பலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் என தமிழகம் முழுவதும் மொத்தம் 26 இடங்களில் சோதனை நடைபெற்றது. குறிப்பாக கரூரில் மட்டும் 22 இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம் 25 லட்ச ரூபாய், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

வருமானத்திற்கு அதிகமாக எவ்வளவு சொத்து சேர்த்திருந்தார் என்பது குறித்த முதல் தகவல் அறிக்கையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக எம்.ஆர்.விஜயபாஸ்கரின் நிறுவன ஆலோசகராக செயல்பட்டு வரும் சென்னை அண்ணாநகரில் வசிக்கும் ரவிக்குமார் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். போக்குவரத்துத்துறையில் அரசு ஒப்பந்தம் செய்த டெடி என்ற நிறுவனத்தின் ஆலோசகர் ரவிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>