சேலத்தில் இடி, சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை

சேலம் : சேலத்தில் நேற்று மாலை இடி மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இம்மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சேலத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணியளவில், வானில் கருமேகக்கூட்டங்கள் கூடியது. பின்னர் அரை மணிநேரம் பலத்த இடி மற்றும் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பின்னர் அரைமணி நேரம் லேசான மழை பெய்தது. இதைத்தொடர்ந்து 6.30 மணியளவில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இம்மழையால் சேலத்தில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ஏற்காட்டில் பெய்த மழையால் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு சென்றனர். இதனிடையே, அன்னதானப்பட்டியில் இருந்து தாதகாப்பட்டி செல்லும் வழியில் இருந்த பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால், அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தின் அடியில் கார் ஒன்று சிக்கி சேதமடைந்தது. தகவலறிந்து வந்த மாவட்ட உதவி அலுவலர் முருகேசன் தலைமையிலான செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள், நவீன உபகரணங்களை கொண்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

Related Stories: