×

விஜய் வழக்கில் மட்டும் காட்டமான கருத்துக்களை கூறியது ஏன் என வாதம்... ரூ.1 லட்சம் அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்!!

சென்னை : சொகுசு கார் விவகாரத்தில் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடுமையாக விமர்சித்துவிட்டு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்கக் கோரி நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் விஜய் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், இறக்குமதி கார் மீதான நுழைவு வரி விவகாரத்தில் தனி நீதிபதி தெரிவித்த தேவையில்லாத கருத்துக்களை நீக்க வேண்டும். ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்க்கவில்லை, மதிக்கிறோம். இறக்குமதி கார் மீது நுழைவு வரி விதிக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு அமலில் இருந்ததால் வழக்கு தொடர்ந்திருந்தோம். இதே போன்ற வழக்குகளில் வெறுமனே நிராகரித்த நீதிமன்றம், விஜய் வழக்கில் மட்டும் அவரை பற்றி விமர்சித்துள்ளது.

விஜய் மீது கூறப்பட்ட நியாயமற்ற விமர்சனங்களை நீக்க வேண்டும்.விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும்.வழக்குக்கும் மனுதாரர் செய்யும் தொழிலுக்கும் என்ன தொடர்பு உள்ளது.எல்லா நடிகர்களையும் பொத்தாம் பொதுவாக மனம்போன போக்கில் தனி நீதிபதி விமர்சித்ததை ஏற்க முடியாது.நடிகர் விஜய்யை ஏதோ தேச விரோதி போல சித்தரித்து நீதிபதி விமர்சித்தது நியாயமற்றது.விஜய் தொடர்ந்த வழக்கு 9 ஆண்டுகள் கிடப்பில் இருந்ததற்கு அவரா காரணம் ?.விஜய்யை கடுமையாக விமர்சித்துவிட்டு அபராதம் விதித்தது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் உள்ளது.வரி விதிப்பை எதிர்த்து வழக்கு தொடர ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது. வரி விதிப்பு தொடர்பாக 500 வழக்குகள் நிலுவையில் உள்ளபோது விஜய் வழக்கில் மட்டும் நீதிபதி காட்டமான கருத்துக்களை கூறியது ஏன்?,என்று வாதிட்டார்.   

விஜய நாராயணன் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அமர்வு, நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்தவும் இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இயக்குமதி செய்யப்பட்ட கார் மீது விதிக்கப்பட்ட நுழைவு வரி பாக்கியை வசூலிக்க செலான் பிறப்பிக்க உத்தரவிட்டது. மேலும் விஜய்யை விமர்சித்த தனி நீதிபதியின் கருத்துக்களை நீக்குவது பற்றி 4 வாரங்களுக்கு பின் விசாரணை நடைபெறும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வணிகவரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டு வரித் தொகை எவ்வளவு என்பதை சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் மீதம் உள்ள 80% வரித் தொகையை அடுத்த ஒரு வாரத்தில் விஜய் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

Tags : Vijay ,ICC , விஜய்
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...