ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது-வாணியம்பாடியில் எஸ்பி அதிரடி

வாணியம்பாடி :  வாணியம்பாடியில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி அலுவலகத்தில் பயங்கர ஆயுதங்களுடன் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நியூடவுன் ஜீவா நகரை சேர்ந்தவர் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இளைஞர் அணி தலைவர் இம்தியாஸ்(40). இவர் அங்கேயே கட்சி அலுவலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறார். இவரது கட்சி அலுவலகத்தில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக எஸ்பி அலுவலகத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து நேற்றிரவு 10 மணியளவில் எஸ்பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் டிஎஸ்பி பழனிசெல்வம் மற்றும் போலீசார் இம்தியாஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு 8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து 8 கிலோ கஞ்சா, 10 பட்டா கத்தி, 10 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அங்கிருந்த 4 பேரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து கண்காணித்து குற்றவாளிகளை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான 10 போலீசாருக்கு எஸ்பி சிபி சக்கரவர்த்தி பாராட்டு தெரிவித்து வெகுமதி வழங்கினார்.

Related Stories: