மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் சிறப்பான செயல்பாடு: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு ஐகோர்ட் கிளை நீதிபதிகள் பாராட்டு

மதுரை: மதுரை எய்ம்ஸ் தற்காலிக வெளிநோயாளிகள் பிரிவை உடனடியாகஉருவாக்கவும், எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தவும் உத்தரவிட வேண்டும் என கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  தமிழக அரசின் மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலரின் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘‘எய்ம்ஸ் குறித்து முடிவெடுப்பது தொடர்பாக கடந்த 16ம் தேதி கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில்,  வரும் கல்வி ஆண்டில் 50 இடங்களைக் கொண்டு எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையை துவக்குவது தொடர்பான தமிழக அரசின் பரிசீலனை முன்வைக்கப்பட்டது.

ஒன்றிய அரசிடம் இருந்து இதற்கான முன்மொழிவு கிடைக்கப்பெற்றதும் அதற்குத் தேவையான இடங்கள் மற்றும் வசதிகள் குறித்து தமிழக அரசு முடிவெடுத்து ஒன்றிய அரசிற்கு தெரிவிக்கும்’’ என கூறப்பட்டிருந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் பாராட்டும் வகையில் சிறப்பாகவும், விரைந்தும் செயல்படுகிறது’’ என்று பாராட்டினர்.  பின்னர், ஒன்றிய சுகாதாரத்துறை மற்றும் எய்ம்ஸ் இயக்குநர் ஆகியோர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டுமென கூறிய நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: