டெண்டர்களில் 12% கமிஷன் வாங்கியதாக குற்றச்சாட்டு: மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1,500 கோடி ஊழல்: கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார்

கோவை: திட்டப்பணிகளில் ரூ.1,500 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த திமுக உறுப்பினரும், திரைப்பட தயாரிப்பாளருமான ரேஸ்கோர்ஸ் ரகுநாத், கோவை மாநகர பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரிடம் நேற்று புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:  நான் திரைப்பட தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உள்ளேன். கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட பகுதிகளில் கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள், லஞ்ச லாவண்யங்கள் நடைபெற்று, பொதுமக்களின் வரிப்பணத்தை லட்சக்கணக்காகவும், கோடிகளை தாண்டியும் மாஜி மந்திரி வேலுமணி மற்றும் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் மோசடி செய்து விட்டனர்.

கோவை மாநகரில் ரூ.1,500 கோடி அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு, தற்போது ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டதாகவும், பில்லூர் 3ம் அபிவிருத்தி திட்டம் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.116 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி, நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் திட்டத்துக்கு ரூ.230 கோடி, கோவை மாநகருக்கு 24 மணி நேர  குடிநீர் சப்ளை திட்டம் ரூ.550 கோடி எனவும், குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் ரூ.195 கோடி, ஆத்துப்பாலம்-உக்கடம் மேம்பால பணிகள் ரூ.215.51 கோடி, கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் ஆரம்பத்தில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்து, பிறகு அதைவிட தொகையை அதிகமாக்கியும், ஆர்.எஸ்.புரம் திட்டத்திற்கு நிதி அதிகமாக ஒதுக்கீடு செய்து அதிலும் பணிகள் முழுமையாக முடியாமலும், அதன்பிறகு 9 குளங்கள் தூர் வாரவும், அழகுபடுத்தவும் கோடிக்கணக்கான தொகையை ஒதுக்கி அந்த பணிகளில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.1,500 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளார்.

குடிசை மாற்று வாரிய வீடுகள், சூயஸ் வாட்டர் திட்டம், வெள்ளலூர் பஸ் நிலையம் அமைப்பதில் ஊழல், தொண்டாமுத்தூர் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட சாலை, சாக்கடை மற்றும் கடந்த ஆட்சி காலத்தில் கோவை மாநகரில் நடைபெற்ற அனைத்து மாநகராட்சி பணிகளுக்கும் 12 சதவீத கமிஷனாக பெறுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதிகப்படியாக கொள்ளையடித்த மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறையின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து கொள்ளையடித்து, மக்களை வஞ்சித்த இவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உரிய நியாயம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

Related Stories: