கேரளாவில் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்காக 46.7 கோடி நிதி குவிந்தது: மீதி தொகையை பாதிக்கப்பட்ட பிற குழந்தைகளுக்கு தர முடிவு

திருவனந்தபுரம்: கேரளாவில் முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் சிகிச்சைக்கு 46.7 கோடி நிதி கிடைத்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள மாட்டூல் பகுதியை சேர்ந்தவர் ஆரீப். இவருக்கு அப்ரா என்ற 15 வயது மகளும், முகம்மது என்ற ஒன்றரை வயது மகனும் உள்ளனர். அப்ரா முதுகெலும்பு தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் எழுந்து நடக்க முடியாமல் உள்ளார். 2வது குழந்தை முகம்மதுவுக்கும் இதே பிரச்னை உள்ளது. இந்த நோய்க்கு சோல்ஜென்ஸ்மா என்ற ஒரே ஒரு மருந்துதான் உள்ளது. இதன் விலை 18 கோடியாகும். இது அமெரிக்கா உள்பட ஒரு சில நாடுகளில் மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மருந்து இருக்கும் தகவல் கிடைத்ததால் முகம்மதுவுக்கு சிகிச்ைச அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு குழுவை அமைத்தனர். அந்த குழு சார்பில் நிதி திரட்டப்பட்டது. சமூக வலைதளங்களிலும் பணம் கேட்டு கோரிக்கை விடுத்தனர். தகவல் வெளியான 6 நாட்களிலேயே மருந்துக்கான 18 கோடி திரண்டது.

இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் ஆரீப் வங்கி கணக்கில் பணம் அனுப்பி வைத்தனர். தன்னுடைய மகன் சிகிச்சைக்கு தேவையான பணம் 18 கோடி கிடைத்து விட்டதால் இனிமேல் யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று சமூக வலைதளத்தில் ஆரீப் தெரிவித்தார். ஆனால் அதன்பின்னரும் பணம் வருவது நிற்கவில்லை. நேற்று வரை ஆரீப் வங்கி கணக்கில் 46.78 கோடி வந்துள்ளது. மொத்தம் 7 லட்சத்து 77 ஆயிரம் பேர் ஒரு ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து ஆரீப் கூறுகையில், ‘‘எனது இரு குழந்தைகளும் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது குழந்தை முகம்மதுவுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிக்க தீர்மானித்திருந்தேன். ஆனால் நான் கேட்டதை விட கூடுதல் பணம் வந்ததால் 2 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்க தீர்மானித்துள்ளேன். மீதம் உள்ள பணத்தை கேரளாவில் இதேநோயால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற குழந்தைகளின் சிகிச்சைக்கு கொடுக்க தீர்மானித்துள்ளேன்’’ என்றார். கேரளாவில் இதே நோயால் பாதிக்கப்பட்ட 20 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>