ஒடிசா வாலிபரை கொன்று கிருஷ்ணா கால்வாயில் சடலம் புதைப்பு: 4 பேர் கைது: இருவருக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் இஸ்ரேல் சாகா (34). ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிபாக்கத்தில் தங்கி, அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்தார். கடந்த 18ம் தேதி இஸ்ரேல் சாகா, பெரும்புதூரில் உள்ள தனது நண்பரை பார்க்க சென்றார். அதன்பின்னர் அவர், ராணிப்பேட்டை செல்லவில்லை.

இதுகுறித்து அவரது சகோதரர் இஸ்மாயில் சாகா, கடந்த 24ம் தேதி காவேரிபாக்கம் போலீசில், புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இஸ்ரேல் சாகாவின் செல்போன் சிக்னலை வைத்து நேற்று முன்தினம் பெரும்புதூருக்கு சென்று விசாரித்தனர். அப்போது, திருவள்ளூர் மாவட்டம் படூர் கிராமத்தை சேர்ந்த ராஜ் (28), ஜெயக்குமார் (30), ரஞ்சித் (32) உள்பட 4 பேர் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் தீவிரமாக விசாரித்தனர்.

அதில், இஸ்ரேல் சாகாவை அடித்து கொலை செய்து, சடலத்தை ஸ்ரீபெரும்புதூர் அருகே மேவளூர்குப்பம் கிருஷ்ணா கால்வாயை ஒட்டி புதைத்ததாக கூறினர். மேலும் விசாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த திப்பு (47)  பெரும்புதூர் அருகே தண்டலத்தில் வீடு வாடகை எடுத்து பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்கிறார். இஸ்ரேல் சாகா, திப்புவுக்கு பாலியல் தொழிலுக்காக பெண்களை சப்ளை செய்தார். அதற்கான கமிஷன் வாங்கியுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இஸ்ரேல் சாகா ஒரு பெண்ணை தண்டலம் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது, ஏற்கனவே கமிஷன் தொகை 80 ஆயிரம் தரவேண்டும் என திப்புவிடம் கேட்டுள்ளார். அதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அந்த நேரத்தில், திப்புவின் நண்பர்கள் ராஜி, ஜெயக்குமார், ரஞ்சித் உள்பட 6 பேர், இஸ்ரேல் சாகாவை சரமாரியாக தாக்கியதில், அவர் மயங்கி விழுந்தார். அவரை, அந்த அறையில் வைத்து பூட்டினர். இரவு சென்று பார்த்தபோது இஸ்ரேல் இறந்து கிடப்பது தெரிந்தது. இதையடுத்து சடலத்தை  மேவளூர்குப்பம் அருகே கிருஷ்ணா கால்வாயில், பள்ளம் தோண்டி புதைத்தனர் என அவர்கள் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார், நேற்று இரவு சடலத்தை தோண்டி எடுத்து அதே இடத்தில் பெரும்புதூர்அரசு மருத்துவமனை டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் 4 பேர் கொடுத்த வாக்குமூலத்தின்படி திப்பு மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். மேலும் திப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும்புதூர் பகுதியில் பாலியல் தொழில் செய்த வழக்கில் கைதாகி சிறை சென்று, ஜாமீனில் வெளியே வந்து, மீண்டும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு, அதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரிந்தது.

Related Stories:

>