×

24 ஏக்கர் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு புகார்: குன்றத்தூர் தாசில்தார் பரிசீலிக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கேகே நகரை சேர்ந்த எம்.நடராஜன் என்பவர், தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் தாலுகா மவுலிவாக்கத்தில் அரசு புறம்போக்கு நிலத்தை, அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி தலைவர் சதாசிவம் ஆக்கிரமித்துள்ளார். கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். சர்வே எண் 7/5ல் 12. ஏக்கர், சர்வே எண் 7/7ல் 12.3 ஏக்கர் நிலம் மட்டுமல்லாமல் மானிய பூதான இயக்க நிலத்தின் அருகில் 40 ஆயிரம் சதுர அடியையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து குன்றத்தூர் தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கடந்த 2015 முதல் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி குன்றத்தூர் தாசில்தாரிடம் புகார் கொடுத்தேன். அதன்மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வக்கீல் பி.முத்துக்குமார் ஆஜராகி, மனுதாரரின் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட தாசில்தார் பரீசிலனை செய்வார் என கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் புகார் மீது விசாரணை நடத்தி 8 வாரங்களுக்குள் குன்றத்தூர் தாசில்தார் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இருதரப்புக்கும் தாசில்தார் வாய்ப்பளித்து மனுவை பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Tags : Kunrathur Dasildar ,Chennai High Court , Chennai High Court, Order
× RELATED மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை...