தாய்மாமன் வெட்டிக்கொலை: மைத்துனன் உள்பட 2 பேர் கைது

செங்கல்பட்டு: உத்திரமேரூர் அடுத்த மானாமதி இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் முரளி (25). கூலி தொழிலாளி. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 4 மாத கை குழந்தை உள்ளது. முரளி மீது உத்திரமேரூர், சாலவாக்கம், காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவரது மாமியார் கன்னியம்மாள், செங்கல்பட்டு அடுத்த அமணம்பாக்கம் இருளர் பகுதியில் வசிக்கிறார். நேற்று முன்தினம் முரளி, அம்மணம்பாக்கத்தில் உள்ள மாமியார் கன்னியம்மாள் வீட்டுக்கு சென்றார். அப்போது கன்னியம்மாள் அங்கு இல்லை. இதையடுத்து முரளி, மீஞ்சூரில் உள்ள தாய்மாமன் தினேஷ் (40) என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். அங்கு 2 பேரும் மது அருந்தினர்.

அந்த நேரத்தில், முரளியின் நண்பர்கள் அங்கு சென்றனர். அவர்களும் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள், வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் தினேஷ், இவர்களை ஏன் அழைத்தாய் கேட்டு தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், தினேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், முரளி, தினேஷ் மீது காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது. இவர்களுக்குள் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தினேஷை கொலை செய்தார்களா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதற்கிடையில், வேளச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த முரளி, அவரது நண்பர் அம்மணம்பாக்கத்தை சேர்ந்த பிரசாத் (24) ஆகியோரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories:

>