கணவன் அடித்துக்கொலை: மனைவி கைது

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் கிராமம் புதுத் தெருவை சேர்ந்தவர் கங்காதரன் (35). லாரி டிரைவர். இவரது மனைவி அர்ச்சனா (32). 2 மகன்கள் உள்ளனர். கங்காதரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனல், தினமும் அவர் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இதையொட்டி கணவன், மனைவி இடையே வாக்குவாதம் நடக்கும். மேலும் கங்காதரன், குடும்ப செலவுக்கும் பணம் கொடுப்பது கிடையாது என கூறப்படுகிறது. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் அர்ச்சனா, குழந்தைகளுடன் தவித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனித்தனியாக வசித்தனர். இதையடுத்து கங்காதரன், அர்ச்சனா வசிக்கும் எதிர் வீட்டில் குடியேறினார். இதற்கிடையில், குடும்ப செலவை சமாளிக்க அர்ச்சனா, அதே பகுதியில் உள்ள கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

அவர் வேலைக்கு செல்லும் போதும், வீடு திரும்பும்போது, கங்காதரன் தினமும் பின் தொடர்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த கங்காதரன், மனைவியிடம் தகராறு செய்தார். இதில், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சனா, வீட்டில் இருந்த பெரிய உருட்டுக்கட்டையை எடுத்து, கணவனை சரமாரி தாக்கினார். இதில் கங்காதரன் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.புகாரின்படி காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் அர்ச்சனாவை கைது செய்து, தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related Stories:

>