கடைகளில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்த இரு வியாபாரிகள் கைது

ஆவடி: அம்பத்தூர் வரதராஜபுரம் எம்.டி.எச் சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக அம்பத்தூர் போலீஸ் உதவி கமிஷனர் கனகராஜிக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவர் உத்தரவின்பேரில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர்.  அப்போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 150 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கடை உரிமையாளரை காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், அவர் அம்பத்தூர் வரதராஜபுரம் கல்யாணி அம்மன் தெருவை சேர்ந்த அருண்குமார்(37) என்பது தெரியவந்தது. இதேபோல், அம்பத்தூர், வெங்கடாபுரம் கே.கே.ரோடு, 7வது தெருவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை உள்ளது. இங்கு,  குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நேற்று மதியம் கிடைத்த தகவலின்பேரில் அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அங்கு 50 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கடையின் உரிமையாளர் அம்பத்தூர் மேனாம்பேடு பழைய மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணி சவுத்ரி(23) என என தெரியவந்தது. புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் அருண்குமார், மணி சவுத்ரியை கைது செய்தனர்.

Related Stories:

>