வனத்துறை தொடர்ந்து கெடுபிடி செய்வதால் காப்புக்காடு வழியாக செல்லும் சாலைகள் மூடல்: கிராமத்துக்கு செல்லமுடியாமல் தவிக்கும் மக்கள்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பூண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் காப்புக்காடுகள் உள்ளது. திருத்தணி வட்டத்துக்கு உட்பட்ட அருங்குளம், மாமண்டூர் மற்றும் நிமிலி உள்ளிட்ட பகுதிகளில் காப்புக்காடு உள்ளது. இந்த கிராமங்களுக்கு செல்வதற்காக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 200 மீட்டர் வரை காப்புக்காடு உள்ளது. காப்புக்காடு சாலை வழியாகத்தான் மேற்கண்ட கிராமங்களுக்கு மக்கள் செல்லவேண்டும். இந்த பகுதியில் ஏற்கனவே மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. தற்போது இந்த சாலைகளை சீரமைக்க முடிவு செய்தபோது அதற்கு வனத்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதன் வழியாக மின்தடை பாதை அமைக்க மின்வாரியம் முற்பட்டபோதும் அதற்கு வனத்துறை மறுத்துவிட்டது.

இதேபோல் அத்திப்பட்டு கிராமத்தில் இருந்து வேணுகோபாலபுரம் கிராமத்துக்கு செல்லும் சாலை பணிகளை நிறைவேற்றவிடாமல் வனத்துறை தடுத்துநிறுத்தியுள்ளது. நாபலூர் ஊராட்சிக்கு உட்பட்ட குன்னத்தூர் கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்ச்சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கியது. ஆனால் அந்த சாலையை சீரமைக்கவிடாமல் வனத்துறை தடுத்து நிறுத்திவிட்டது. இதனால் கிராம மக்கள் பல்வேறு கிராமங்களுக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இந்த விஷயத்தில் ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறியதாவது: வனத்துறை கட்டுப்பாட்டில் காப்புக்காடுகள் உள்ளது. இங்குள்ள வளத்தையும், விலங்குகளையும் கண்டிப்பாக பாதுகாக்கவேண்டும். அதற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்திவரும் சாலைகளை மூடுவது சரியாக இருக்காது. வனத்துறையின் சட்டத்தை மக்களுக்கு எடுத்துரைத்து அதன்படி சாலைகளை பயன்படுத்த அறிவுறுத்தவேண்டும். விலங்குகள் நடமாடும் பகுதியாக இருந்தால் எச்சரிக்கை பலகை வைத்து மக்களுக்கு அறிவுறுத்தலாம். இதையொல்லாம் விட்டுவிட்டு நூற்றாண்டுக்கு மேலாக பயன்படுத்திவரும் சாலையை மூடுவது சரியல்ல. இந்த விஷயத்தில் வனத்துறையிடம் பேசி ஒன்றிய, மாநில அரசுகள் ஒரு தெளிவான முடிவு எடுத்து மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். காப்புக்காடு வழியாக செல்லும் சாலையை கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவர வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: