மாவட்டங்கள் பிரிப்பதில் குளறுபடி: செம்பரம்பாக்கம் ஊராட்சியில் பொதுமக்கள் கடும் அவதி: கலெக்டரிடம் புகார் மனு

திருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியம் செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட், துணை தலைவர் கன்னியம்மாள் ருத்திரகுமார், 12வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த செங்கல்பட்டு மாவட்டத்தை 1997ம் ஆண்டு இரண்டாக பிரித்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பழஞ்சூர், பாப்பன்சத்திரம் கிராமங்களை 1999ல் அரசு ஆணையில் பிரித்து அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த இரண்டு கிராமங்களையும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு பிரித்து செயல்பட அனுமதிக்கப்படாமல் காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே செயல்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர் மற்றும் பாப்பன்சத்திரம் கிராமங்கள் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ள கிராமங்கள் ஆகும். ஆனால் அந்த இரண்டு கிராமங்களையும் மாவட்ட நிர்வாகத்தால் முழுமையாக நிர்வகிக்க முடியவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் வருவாய் நிர்வாகங்களான நில ஆவணங்கள், வரி விதிப்பு, வாரிசுரிமை சான்றிதழ், மின் இணைப்புகள், இருப்பிட சான்றிதழ்கள், நிலங்களுக்கு பட்டா, சிட்டா பெறுவது ஆகியவை காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் எல்லைக்குள்ளும், நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் ஊராட்சி மன்ற தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை, காவல் நிலையம், சுகாதாரம், கல்வி, குடும்ப அட்டை, மற்றும் பத்திர பதிவு போன்றவைகள் திருவள்ளூர் மாவட்ட வருவாய் எல்லைக்குள்ளும் வருகிறது.

பழஞ்சூர் மற்றும் பாப்பான்சத்திரம் கிராமங்களை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து திருவள்ளூர் மாவட்டத்தில் இணைக்க வேண்டும் என்று நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்காக பல்வேறு கட்ட போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பழஞ்சூர் கிராம வருவாய் நிர்வாகத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக எல்லையிலிருந்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாக எல்லைக்கு மாற்றுதல் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வருவாய் துறைக்கு உத்தரவிடக்கோரி புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 2019ம் ஆண்டில் இதுதொடர்பாக உத்தரவு அரசு ஆணையும் வெளியிடப்பட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் அரசு ஆணை நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பழஞ்சூர் மற்றும் பாப்பன் சத்திர கிராமங்களின் வருவாய் நிர்வாகத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாக எல்லையிலிருந்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாக எல்லைக்குள் மாற்றி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று கூறியிருந்தனர்.

Related Stories: