3 வாலிபர்களை தாக்கி வழிப்பறி: 3 பேர் கைது

ஆவடி: ஆவடி, பெரியார் நகர் கே.வி.கே.சாமி தெருவை சேர்ந்தவர் யோகேஷ்குமார்(22). இவரது உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த சத்யபிரகாஷ்(21), வேலூரை சேர்ந்த யோகேஸ்வரன்(21). கடந்த 24ம் தேதி யோகேஷ்குமாரின் மாமா மகேந்திரன் உடல்நலகுறைவு காரணமாக இறந்தார். இவரது உடல் தகனம் பெரியார் நகர், சுடுகாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேற்கண்ட மூவரும் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் இரவு பெரியார் நகர் பாரதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.  

அப்போது, அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்து தகராறு செய்தது. பின்னர், அக்கும்பல் யோகேஸ்வரனை கைகளால் சரமாரி தாக்கி, அவருடைய பாக்கெட்டில் இருந்த 10 ஆயிரம் ரொக்கம், சத்தியபிரகாஷை அடித்து, அவரது காதிலிருந்த இரு கம்மல்களை மிரட்டி பறித்தது. மேலும், இதனை தட்டிக்கேட்ட யோகேஷ்குமாரை பீர்பாட்டிலால் தலையில் சரமாரியாக அடித்து அக்கும்பல் அங்கிருந்து நகை, பணத்துடன் தப்பி தலைமறைவாகியது. இதில், படுகாயமடைந்த யோகேஷ்குமார் உட்பட மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு மூவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புகாரின்பேரில் ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஆவடி பெரியார் நகர் நாசர் தெருவை சேர்ந்த தமீம் அன்சாரி(23), ஸ்டாலின் தெருவை சேர்ந்த அமீர்(25), லாசர் நகர் 4வது தெருவை சேர்ந்த பூபாலன்(20), காமராஜர் நகர்  புத்தர் தெருவை சேர்ந்த மணி (எ) மண்டமணி(28), ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பப்லு (எ) பவித்ரன்(24), ஆவடி ராமலிங்கபுரத்தை சேர்ந்த அஜிஸ்(23) ஆகியோர் என தெரியவந்தது. இதில், தமீம் அன்சாரி, பூபாலன், அமீர் மூவரையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். 3 பேரை தேடுகின்றனர்.

Related Stories:

>