அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி; வாலிபர் கைது: 18 பேரிடம் இருந்து பணம் பறித்தது அம்பலம்

திருவள்ளூர்: வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலியான உத்தரவு தயாரித்துக் கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் 18 பேரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. திருநின்றவூர் அடுத்த நடுகுத்தகை கிராமத்தை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மகன் பார்த்தசாரதி(21). இவர் கடந்த 2020ம் ஆண்டு தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு எழுதி, தேர்வு முடிவிற்காக காத்திருந்தார்.  இந்நிலையில், பார்த்தசாரதி திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரிந்து வருவதாக தம்மை காட்டி கொள்ளும் திருப்பாச்சூர் காலனியை சேர்ந்த அசோகன் மகன் அரவிந்தன்(25) என்பவரை அணுகியுள்ளார். சில நாட்கள் கழித்து, அரவிந்தன் பார்த்தசாரதியை செல்போனில் தொடர்பு கொண்டு, அவர் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனவும், அவருக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் அலுவலக உதவியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பார்த்தசாரதியை நம்ப வைத்துள்ளார். அவரிடமிருந்து கூகுள்பே மற்றும் நேரிலும் 4 லட்சத்து 67 ஆயிரத்து 207ஐ வாங்கியுள்ளார்.

மேலும், அரவிந்தன் போலியான பணி நியமன ஆணை தயார் செய்து பார்த்தசாரதிக்கு வழங்கியுள்ளார். இந்த பணி நியமன ஆணை குறித்து விசாரித்தபோது போலியானது என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்தசாரதி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக தொலைபேசி எண்ணில் 63799 04848 தொடர்பு கொண்டு இதுபற்றி தகவல் தெரிவித்து, போலி பணிநியமன ஆணை நகலை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார். உடனடியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் லில்லி தலைமையில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் மனோஜ் பிரபாகர் தாஸ் மற்றும் போலீசார் அரவிந்தனை கைது செய்து, அவரிடமிருந்து ஒரு செல்போன், இரண்டு சிம் கார்டுகள் மற்றும் அரசு விண்ணப்ப படிவங்கள், போலி சான்றிதழ்கள் கைப்பற்றினர்.

விசாரணையில் அரவிந்தன் கடந்த 2020ம் ஆண்டு தமிழக ஊர்க்காவல் படையில் பணிக்கு சேர விண்ணப்பித்து இருந்ததாகவும், அதுசம்பந்தமாக அடிக்கடி மாவட்ட காவல் அலுவலகம் வந்து சென்றபோது, அலுவலக ஊழியர்கள் சிலரிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்பழக்கத்தை தவறான வழியில் பயன்படுத்தி போலீசில் வேலை வாங்கி தருவதாக 10 பேரையும் மற்றும் இதேபோல் தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 8 பேரையும் ஆக மொத்தம் 18 பேர்களை ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரவிந்தன் மீது வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருவள்ளூர் கிளை சிறைச்சாலைக்கு கொண்டு சென்று அடைத்தனர். மேலும் திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக ஊழியர்கள் எவருக்கேனும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: