பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ராஜ் குந்த்ராவின் வங்கிக் கணக்கு முடக்கம்: ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

மும்பை: ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச படங்களை உருவாக்கி அதனை ஹாட்ஷாட் மொபைல் ஆப்ஸ் மூலம் வெளியிட்ட புகாரின் பேரில் மும்பை காவல் துறையால் கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீஸ் காவலில் விசாரிக்க இன்று வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில், ஷில்பா ஷெட்டி வீட்டிலும், குந்த்ராவின் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.  ராஜ் குந்த்ராவின் வியான் இண்டஸ்டிரீசில் பணியாற்றிய ஊழியர்கள் 4 பேர் இந்த வழக்கில் அப்ரூவர் ஆகியுள்ளனர்.

குந்த்ராவுக்கு கான்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 2 கணக்குகள் உள்ளன. இவற்றை முடக்குமாறு மும்பை போலீசார் வங்கிக்கு பரிந்துரை அனுப்பியிருந்தனர். இதன் அடிப்படையில், அந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த 2 கணக்குகளிலும் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர். குந்தராவை ஜாமீனில் எடுக்க அவர் சார்பில் வக்கீல், மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருவதாக வக்கீல் தெரிவித்தார்.

‘நிர்வாண வீடியோ எடுத்தது உண்மை’

ராஜ் குந்த்ராவின் ஆபாச படதயாரிப்பு வழக்கில் இயக்குநர் தன்வீர் ஹாஷ்மியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், ‘‘ராஜ் குந்த்ராவை நான் நேரில் சந்தித்தது இல்லை. 20 முதல் 25 நிமிடம் ஓடக்கூடிய நிர்வாண படம் எடுத்தோம். ஆனால் அது, ஆபாச படம் அல்ல’ என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஷெர்லின் சோப்ராவுக்கு மீண்டும் சம்மன்

குந்த்ரா வழக்கில் முதன் முதலாக போலீசில் வாக்குமூலம் கொடுத்தவர் நடிகை ஷெர்லின் சோப்ராதான். இவரிடம் இன்று காலை 11 மணிக்கு விசாரணை நடத்த போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

அவசரமாக நீக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள்

போலீசார் ராஜ் குந்த்ராவை கைது செய்ததற்கு மறுநாளே, ஹாட்ஷாட் ஆப்சில் இருந்து படங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக குந்த்ரா நிறுவன தரப்பில் இருந்து உத்தரவு போடப்பட்டதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>