அசாம்-மிசோரம் எல்லை மோதலில் பயங்கரம்: போலீசார் 6 பேர் சுட்டுக்கொலை

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களான அசாம் - மிசோரம் இடையே ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னை தொடர்பாக நடந்த வன்முறை தாக்குதலில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டனர். 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் சுமார் 164.6 கிமீ தூர எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளன. இங்கு கடந்த 1955ம் ஆண்டிலிருந்தே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. கடந்த மாத இறுதியில், மிசோரம் மாநிலத்தின் ஐட்லாங் நதியருகே வைரங்டே கிராமத்திலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள எல்லையை அசாம் ஆக்கிரமிக்க முயன்றதாக மிசோரம் முதல்வர் சோரம்தங்கா குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, இரு மாநிலங்களிடையே எல்லை பிரச்னை வெடித்துள்ளது.

இதனிடையே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சனிக்கிழமை இரு மாநில முதல்வர்களும் கலந்து ஆலோசித்து எல்லை பிரச்னைக்கு தீர்வு காணும்படி அறிவுறுத்தினார். இந்நிலையில், மிசோரத்தில் நேற்று முன் தினம் 8 விவசாயிகளின் குடிசைகள் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அசாம் போலீசார் மீது மிசோரம் மக்கள் துப்பாக்கி சூடு, கல்வீச்சு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இது குறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், ``அசாமின் லைலாபூர் பகுதியில் எல்லையை பாதுகாக்க நிறுத்தப்பட்டிருந்த அசாம் போலீசார் மீது நடத்திய வன்முறை தாக்குதலில் 6 போலீசார் சுட்டு கொல்லப்பட்டனர். சச்சார் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வாகனங்கள் உள்ட பல வாகனங்கள் தீக்கிரையாகின,’’ என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தால் இரு மாநில எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

அமித் ஷா சமரசம்

இதனிடையே இருமாநில முதல்வர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரு மாநில எல்லையில் பதற்றத்தை தணிக்கவும், வன்முறையை கட்டுப்படுத்தவும் கேட்டு கொண்டார். மேலும், எல்லை பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணும்படி வலியுறுத்தினார்.

Related Stories:

>