நாடாளுமன்ற துளிகள்

`ஐஐடி மெட்ராஸ்’ பெயரே நீடிக்கும்

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், ``சென்னையில் உள்ள மெட்ராஸ் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் பெயரை மாற்றுவது குறித்து அரசுக்கு எந்த பரிசீலனையும் இல்லை,’’ என்று தெரிவித்தார்.

2 மசோதா நிறைவேற்றம்

நேற்று மக்களவை கூடியதும் விவசாயிகள் போராட்டம், பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களின் கூச்சல், குழப்பங்களுக்கு இடையே தொழிற்சாலை ஒழுங்குமுறை திருத்த மசோதா 2020, தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை மசோதா 2021 ஆகியன விவாதங்களின்றி நிறைவேற்றப்பட்டன.

புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படாது

கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவை கேள்வி நேரத்தின் போது ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ``கொரோனா ஊரடங்கில் இருந்த பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருவதால், பொருளாதார அடிப்படை வலுவாக இருக்கிறது. இது தவிர, தற்சார்பு இந்தியா திட்டங்களினால் நடப்பு நிதியாண்டின் 2வது பாதியில் பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி முன்னேறி வருகிறது. இதனால், நெருக்கடியை சமாளிக்க புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடும் எண்ணம் அரசுக்கு இல்லை,’’ என்றார்.

மசூர் பருப்புக்கு இறக்குமதி வரி 0%

மாநிலங்களவையில் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``விவசாய உள்கட்டமைப்பு, உள்நாட்டு சந்தையை ஊக்குவிக்கும் வகையில், அமெரிக்கா தவிர, பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மசூர் பருப்பு மீதான இறக்குமதி சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 0 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. மேலும் அதன் மீதான அடிப்படை சுங்க வரி 30 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதம் குறைக்கப்பட்டு, 20 சதவீதமாக்கப்பட்டு உள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>