×

சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் முருகதாஸ் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை:  நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான சர்க்கார் திரைப்படத்தில் தமிழக அரசையும், அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் அமைக்கப்பட்டது. இதனால் அரசின் திட்டங்களை தவறாக குறிப்பிடுவதாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் தேவராஜன் என்பவர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஏற்கனவே முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் கடந்த 2018ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கை ரத்து செய்ய கோரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திரைப்படம் தணிக்கை முடிந்த பிறகு தான் வெளியிடப்பட்டுள்ளது. தணிக்கை முடிந்த திரைப்படம் குறித்து தனி நபர் அல்லது அரசு கேள்வி எழுப்ப அல்லது வழக்கு பதிவு செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அரசியலமைப்பு வழங்கிய பேச்சுரிமைக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியுள்ளார்.

Tags : Chennai High Court ,Murugadoss ,Sarkar , Sarkar film, Murugadoss
× RELATED மனித குலத்திற்கு பயனளிக்கும் வனத்தை...