கார் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை யாஷிகாவுக்கு ஆபரேஷன்: ஓட்டுனர் உரிமம் பறிமுதல்

சென்னை: கார் விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது.  துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம், நோட்டா, கழுகு 2, ஜோம்பி படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் தனது தோழியான ஐதராபாத்தை சேர்ந்த வள்ளி ஷெட்டி பவானி (26) மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு ஒரே காரில் சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்து சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் ஈசிஆர் சாலை வழியாக சென்னை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியன் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வள்ளி ஷெட்டி பவானி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த்துக்கு காலில் எலும்பு முறிவு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவர்களுடன், வந்த 2 ஆண் நண்பர்கள் லேசான காயங்களுடன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யாஷிகாவுக்கு காலிலும் இடுப்பு பகுதியிலும் நேற்று அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். ‘யாஷிகா உடல் நலம் தேறி வருகிறார். தற்போதைக்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். ஆனாலும் சுயநினைவுடன் நலமாக இருக்கிறார். ஒரு வாரம் அவர் மருத்துவமனையில் இருப்பார். முழுமையாக உடல் நலம் தேறி வர 4 மாதங்கள் ஆகலாம்’ என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கிடையே, அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories:

>