500 படங்களில் நடித்த நடிகை ஜெயந்தி மரணம்

சென்னை: நடிகை ஜெயந்தி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.  கர்நாடக மாநிலம், பல்லாரியில் பிறந்தவர் ஜெயந்தி (76). பரதநாட்டிய கலைஞரான இவர், 1960ல் யானைபாகன் தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் அதிகமான படங்களில் நடித்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் மற்றும் கன்னடத்தில் ராஜ்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன்  நடித்துள்ளார். இதில் ராஜ்குமாருடன் மட்டும் 42 படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் என்.டி.ராமராவ் உட்பட முன்னணி ஹீரோக் களுடன் நடித்துள்ளார்.

தமிழில் கர்ணன், நீர்குமிழி, முகராசி, எதிர்நீச்சல், இரு கோடுகள், நூற்றுக்கு நூறு, வெள்ளிவிழா, புன்னகை, பாமா விஜயம் உள்பட பல படங்களில் நடித்தார். இரு கோடுகள் படத்தில் ‘புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக’ பாடல், வெள்ளி விழா படத்தில் ‘காதோடு தான் நான் பாடுவேன்’ ஆகிய பாடல்களில் இவர் நடித்து பிரபலம் ஆனார். வயதான பிறகு அம்மா வேடங்களிலும் நடித்து வந்தார். டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். கர்நாடக அரசின் 6 விருதுகளை ஜெயந்தி வென்றுள்ளார்.இவரது கணவர் இறந்துவிட்டார். ஒரு மகன் உள்ளார். பெங்களூருவில் உள்ள வீட்டில் ஜெயந்தி தங்கியிருந்தார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். நேற்று அதிகாலை வீட்டிலேயே அவர் இறந்தார்.

Related Stories: