பாஜ தலைமை அலுவலகத்தில் கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்: போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி

சென்னை: பாஜ தலைமை அலுவலகத்தில் கார்கில் வெற்றி தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் கார்கில் வெற்றி தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி நேற்று நடந்தது. பாஜ முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பாஜ மாநில தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். மூத்த தலைவர் இல.கணேசன், ராணுவ பிரிவு துணைத் தலைவர் கேப்டன் ஜி.செல்வராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிரிழந்த 527 ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் மேஜர் சரவணன் உள்பட வீரர்களின் உருவப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் வீரர்கள் சிலர் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து பாஜ தலைவர் கே.அண்ணாமலை பேசுகையில், ‘போலி சித்தாத்தங்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டை பிரித்தாளும் சூழ்ச்சியை சிலர் செய்து வருகிறார்கள். அதனை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உண்மையான தேசியம் சென்றடைய வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில் பொது செயலாளர்கள் கே.டி.ராகவன், கருநாகராஜன், துணை தலைவர் எம்.என்.ராஜா, ஊடக பிரிவு மாநில தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: