கீழ்ப்பாக்கம் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பதுக்கிய 6 புராதன சிலைகள் மீட்பு: சிலை கடத்தல் மன்னனின் கூட்டாளி அதிரடி கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆராஅமுதன் கார்டன்ஸ் என்ற எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் கோயில்களில் இருந்து திருடப்பட்ட புராதன சாமி சிலைகள் பதுக்கி வைத்திருப்பதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார், போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமையிலான தனிப்படை போலீசார் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் சென்று அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது அங்கு இந்து கோயில்களில் இருந்து திருடப்பட்ட உலோக அம்மன் சிலை, 2 அம்மன் கற்சிலைகள் பழமையான  ஒரு கிருஷ்ணர் ஓவியம் கைப்பற்றினர், இது தொடர்பாக ஏற்றுமதி நிறுவனம் நடத்திய சுப்பிரமணியன் (58) என்பவரை கைது செய்தனர். அவர் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் கூட்டாளி என தெரியவந்தது. மேலும் இந்த சிலைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்பட இருந்ததும்  தெரியவந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர் அபய் குமார் சிங் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: கீழ்ப்பாக்கத்தில் கைப்பற்றப்பட்ட சிலைகள் மற்றும் ஓவியம் ஆகியவை புராதனமாக இருக்கக்கூடும் என்பதால் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. எந்த நாட்டிற்கு கடத்தப்பட இருந்தது என விசாரணை நடத்தி வருகிறோம். தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் சிறப்பாக பணியாற்றி அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை தமிழகத்திற்கு இந்திய தூதரகம் மூலமாக கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1985ம் ஆண்டு தென்காசி நரசிம்ம நாதர் கோயிலில் காணாமல் போன 5 சிலைகளில் அதிகார நந்தி, கங்கால நந்தர் ஆகிய சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல கடந்த 2017ம் ஆண்டு தஞ்சாவூர் விஷ்வநாதர் கோயிலில் காணாமல்போன நரசிம்மர், கிருஷ்ணா கணேஷ், சம்பந்தர், சோமசுந்தரர், விஷ்ணு ஆகிய 6 சிலைகள் கள்ளக்குறிச்சி வீரசோழபுரம் நாரேஸ்வரர் சிவன் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகளில் தடய அறிவியல் துறையின் புகைப்பட ஒப்பீட்டு மூலம் திருப்புராந்கர், திருப்புரசுந்திரி, வீனதாரா, நடராஜர், சுந்தரர், பறவை நாச்சியார் ஆகிய சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை இந்திய தூதரகம் மூலம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020 மற்றும் 2021ல் 17க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு 40 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 74 தொன்மையான சிலைகள் பாண்டிச்சேரியில் பால்ராஜ ரத்தினம் என்பவரிடம் இருந்து மீட்கப்பட்டது. சிலை கடத்தல் தொடர்பா சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. கொரோனா காலமாக இருந்ததால் வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: