மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் பாரபட்சம் பிரதமரின் அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கிறது: கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் ஒன்றிய பாஜ அரசு பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருகிறது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. பாஜ ஆளுகிற மாநிலங்களுக்கு சலுகையும், மற்ற மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசி காலம் தாழ்ந்தே அளிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 2021 மதிப்பீட்டின்படி 7.88 கோடி. தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 44 ஆயிரத்து 870. இதுவரை தமிழகத்தில் 1 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

ஆனால், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் மொத்த மக்கள் தொகை 6.48 கோடி. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் 8 லட்சத்து 24 ஆயிரத்து 546 பேர். தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 68 ஆயிரத்து 770 பேர். இந்த இரண்டு மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் பாஜ அரசின் அப்பட்டமான பாரபட்சமான போக்கிற்கு சான்றுகளாக விளங்குகிறது. இத்தகைய அணுகுமுறையை பிரதமர் மோடி கையாள்வது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகவே கருத வேண்டியிருக்கிறது. மக்கள்தொகை மற்றும் பாதிப்புகளின் அடிப்படையில் ஒரு தெளிவான கொள்கையை வகுத்து தடுப்பூசி விநியோகத்தை சீரமைக்க வேண்டும். பிரதமர் மோடி குஜராத் மாநிலத்திற்கான பிரதமராக செயல்படாமல், அனைத்து மாநிலங்களையும் சமநிலைத் தன்மையோடு அணுகுகிற பிரதமராக செயல்பட வேண்டும். இதுவே கூட்டாட்சி தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: