அதிமுக ஆட்சி ஊழல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து, கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: அமெரிக்க ஏகாதிபத்திய அரசினை கண்டித்து வரும் 29ம்தேதி சென்னையில், அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்கள் நலன் காக்கவும் தொடர்ந்து போராடுவது என தீர்மானித்துள்ளோம். தமிழகத்தில் நீட் தேர்வை திணிப்பது போன்ற ஒன்றிய பாஜ கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு அனைத்து வகைகளிலும் மதவெறி பாஜவுக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டது. அனைத்து துறைகளிலும் ஊழலும், முறைகேடுகளும் நீக்கமற நிறைந்திருந்தது. அனைத்து பணி நியமனங்களும், இடமாறுதலும் பண அடிப்படையிலேயே நடைபெற்றது.

ஆட்சியிலிருந்த காலத்திலேயே முதல்வர், துணை முதல்வர், பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்து நீதிமன்றம் வரை சென்றது.இந்நிலையில் முந்தைய ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல், முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களை தண்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட தமிழகத்தின் உரிமையை மீட்பது உள்ளிட்ட தமிழக மக்களின் நலன் காக்க தொடர்ந்து போராடுவது என முடிவு செய்துள்ளோம்.

Related Stories:

>