துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.4.03 கோடி தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

மீனம்பாக்கம்:துபாயில் இருந்து ஏமரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்று முன்தினம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த 104 பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி, அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர். பின்னர் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை சோதனையிட்டனர். எதுவும் சிக்கவில்லை. ஆனாலும் சந்தேகம் தீராத அதிகாரிகள், அவர்களின் சூட்கேஸ்களை திறந்து பார்த்தனர். அதற்குள், எலக்ட்ரானிக் குக்கர், மிக்ஸி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் இருந்தன.

அவைகளை எடுத்து கழற்றி பார்த்தபோது, அதனுள் தங்க தடுகள் வளையங்கள், உருளைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதன் மொத்த எடை 8.17 கிலோ. அதனை கைப்பற்றினர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.4.03 கோடி. இதையடுத்து இருவரையும் சுங்கத்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், துபாயில் 2 பேர், இந்த வீட்டு உபயோக மின்னணு சாதனங்களை அவர்களிடம் கொடுத்து, சென்னை விமான நிலையத்தில் உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்தால் ரூ.5 ஆயிரம் பரிசாக தருவார் என்றனர். அந்த பணத்திற்கு ஆசைப்பட்டுத்தான் வாங்கி வந்தோம் என்றனர். இதையடுத்து, சென்னையில் அந்த பொருட்களை வாங்க வந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் சர்வதேச தங்கம் கடத்தல் கும்பல் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>