உட்கட்சி பூசலால் பா.ஜ. மேலிட உத்தரவுக்கு பணிந்தார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா: 4 முறை பதவியேற்றும் ஒரு முறை கூட ஆட்சியை நிறைவு செய்யாத பரிதாபம்

பெங்களூரு: உட்கட்சி பூசல் காரணமாக பாஜ மேலிட தலைவர்களின் உத்தரவுக்கு பணிந்து கர்நாடக மாநில முதல்வர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அளித்தார். நான்கு முறை முதல்வராக இருந்தும் ஒருமுறை கூட எடியூரப்பாவால் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்ய முடியவில்லை. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைந்தது.

அவர் முதல்வராக பதவியேற்றதில் இருந்தே பல்வேறு உட்கட்சி பூசல் இருந்து கொண்டே தான் இருந்தது. அவருக்கு 78 வயதாகி விட்டதால் கட்சி கொள்கைப்படி அவர் பதவி விலக வேண்டும் என்று பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் வலியுறுத்தி வந்தனர். மேலும் கட்சி மற்றும் ஆட்சியில் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவின் தலையீடு இருந்ததாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜ எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் கூறியிருந்தார். இதனால் எடியூரப்பாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

முதல்வர் எடியூரப்பா கடந்த வாரம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அக்கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார். மாநில வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி வந்தேன் என முதல்வர் எடியூரப்பா விளக்கம் அளித்தார். அதே நேரம் பாஜ மேலிடம் எடியூரப்பாவிடம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என உத்தரவிட்டதாகவும் ஓரிரு நாளில் முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, கோவா மாநிலத்தில் நடந்த அக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற போது கூட முதல்வர் எடியூரப்பா மாற்றம் குறித்து எதுவும் கூறவில்லை. முதல்வர் எடியூரப்பாவின் பணி சிறப்பாக இருக்கிறது என பாராட்டு அளித்தார்.

நேற்று முன்தினம் பெலகாவிக்கு சென்று மழை சேதங்களை முதல்வர் எடியூரப்பா பார்வையிட்டார். அதன் பிறகு நிருபர்களின் கேள்விக்கு எடியூரப்பா பதில் அளித்த போது மேலிடத்தின் உத்தரவு எப்படி இருந்தாலும் அதற்கு அடிபணிவேன் என கூறினார். முதல்வர் எடியூரப்பா மற்றும் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட அமைச்சர்கள் முதல்வர் ராஜினாமா செய்யப்போவதில்லை என பேட்டி அளித்தாலும் பாஜ மேலிட தலைமையின் மவுனம் மாநில அரசியலில் மாற்றம் ஏற்படும் என்பதை உறுதி செய்தது.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சியின் இரண்டாவது வருட சாதனை விளக்க கூட்டம் விதான சவுதா வரவேற்பு அரங்கில் நடந்தது. சாதனை விளக்கக்கூட்டத்தில் முதல்வர் எடியூரப்பா மிகவும் உருக்கமான பேச்சை தொடங்கினார். ஷிகாரிபுராவில் தொடங்கிய அவரின் அரசியல் பயணத்தை விவரித்த எடியூரப்பா தன் மீது நடந்த கொலை முயற்சி தாக்குதல், அதில் இருந்து உயிர் பிழைத்த பிறகு தனி ஆளாக விதான சவுதாவில் போராட்டம்  நடத்தியது உள்ளிட்ட அவரின் கடந்த கால நிகழ்வுகளை மீண்டும்  நினைவுப்படுத்திக்கொண்டார்.

கண்ணீர் பேச்சு: மாநிலத்தில் பாஜ கட்சியை வளர்ச்சி பாதைக்கு அழைத்து வந்ததை கூறிய எடியூரப்பா, ‘‘75 வயதான நிலையிலும் எனக்கு  கட்சி மேலிடம் ஆதரவு அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் அளித்த ஆதரவுக்கு நன்றி  தெரிவித்துக் கொள்கிறேன்’’ என பேசிய போது அவரது குரல் தழுதழுத்தது. அத்துடன் அவரின் கண்களில் நீர் வழிய தொடங்கியது. அதை சமாளித்துக்கொண்டு பேசிய  எடியூரப்பா, ‘‘கட்சி தலைமையின் உத்தரவை ஏற்று பதவியை ராஜினாமா செய்கிறேன். இதனால் எனக்கு எந்த கவலையும் இல்லை. முழு சந்தோசம் தான்’’ என்று கூறினார். முதல்வர் எடியூரப்பாவின் இந்த அறிவிப்பு அமைச்சர்கள்,  எம்எல்ஏக்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதே நேரம் முதல்வர் எடியூரப்பா பேச்சை முடித்துக்கொண்ட கையோடு கவர்னர் மாளிகை சென்று அவரின் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

மாநில கவர்னர் தாவர்சந்த் ஷெகாவத் முதல்வர் எடியூரப்பா அளித்த கடிதத்தை பரிசீலனை செய்து அதை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் மாற்றம் இன்று, நாளை என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் நேற்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. எடியூரப்பா, கர்நாடக மாநில முதல்வராக நான்கு முறை பதவி வகித்துள்ளார். ஆனால் ஒரு முறைகூட 5 வருடம் முழுமையாக எடியூரப்பா முதல்வராக பதவி வகிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவரது சொந்த ஊரான ஷிகாரிபுராவில் அவரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியதோடு கடைகளை அடைக்க கட்டாயப்படுத்தினர். ஆனால்  மாநிலத்தின் மற்ற பகுதிகளில் எவ்வித ஆர்ப்பாட்டமும், எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* புதிய முதல்வருக்கு எனது ஆதரவு நிச்சயம்

ராஜினாமா கடிதத்தை அளித்தப்பின் கவர்னர் மாளிகையில், நிருபர்களிடம் எடியூரப்பா கூறுகையில், ``பாஜ கட்சியில் வேறு யாருக்கும் கிடைக்காத பல சிறப்புகள் எனக்கு கிடைத்துள்ளன. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த முதல்வராக யாரை நியமனம் செய்ய வேண்டும் என சிபாரிசு செய்ய விரும்பவில்லை. அதே நேரம் பாஜ மேலிடம் அறிவிக்கும் நபருக்கு அனைத்து ஒத்துழைப்பும் அளிப்பேன் என்பதை உறுதிபட கூறிக்கொள்கிறேன். பாஜ தலைவர்களின் நெருக்கடியால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் தனிப்பட்ட முறையில் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறவில்லை. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது எனது சொந்த விருப்பமாகும்’’ என்றார்.

* அடுத்த முதல்வர் யார்?

முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பல பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் களத்தில் குதித்துள்ளதாக தெரிய வருகிறது. இருப்பினும் கட்சி மேலிடம் அறிவிக்கும் நபரை மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதன்படி மத்திய அமைச்சராக உள்ள பிரகலாத்ஜோஷி, சபாநாயகராக உள்ள விஷ்வேஸ்வரா ஹெக்டே காகேரி, தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

* எதிரிகள் கை ஓங்கியது

மாநில பாஜவில் பெரிய சக்தியாக எடியூரப்பா இருந்தாலும், அவர் யாரை அதிகமாக நம்பினாரோ அவர்களே கடந்த மூன்று மாதங்களாக ஆட்சி தலைமை மாற்றம் செய்யும் முயற்சியை மேற்கொண்டனர். நம்பினவர்களே முதுகில் குத்தி வருவதாக எடியூரப்பா பலமுறை நெருக்கமானவர்களிடம் கூறி வந்தார். கடந்த மாதம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.யோகேஷ்வர், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்பது தொடர்பாக விவாதத்தை பாஜ தலைமையிடம் வைத்துள்ளோம். வாதம் முடிந்து, தீர்ப்பு மட்டுமே பாக்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று எடியூரப்பா தேசியகொடி ஏற்றி வைக்க மாட்டார். புதிய முதல்வர் ஏற்றுவார் என்று கூறினார். எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளதின் மூலம் எதிரிகளின் கூற்று உறுதியாகி விட்டது.

* மேலிட பார்வையாளர்கள் இன்று வருகை

முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து, புதிய முதல்வர் தேர்வு செய்வது தொடர்பாக பாஜ எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக கட்சியின் மாநில மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தலைமையில் பார்வையாளர்களாக தர்மேந்திரபிரதான், பியூஸ்கோயல், பூபேந்திரயாதவ் ஆகியோர் இன்று காலை பெங்களூரு வருகிறார்கள். இதனிடையில் புதிய முதல்வர் தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் இன்று காலை 9.30 மணிக்கு பாஜ உயர்நிலைக்குழு கூட்டம் நடக்கிறது.

* மடாதிபதிகள் எச்சரிக்கை

முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றம் செய்வதாக தகவல் வெளியாகியதும் ெகாதித்தெழுந்த மடாதிபதிகள், எந்த காரணம் கொண்டும் எடியூரப்பாவை மாற்றக்ககூடாது என்று போர்கொடி தூக்கினர். 50க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் நேரடியாக எடியூரப்பா வீட்டிற்கு வந்து ஆதரவு தெரிவித்ததுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை 500க்கும் மேற்பட்ட மடாதிபதிகள் மாநாடு நடத்தினர். மடாதிபதிகள் எச்சரிக்கை விடுத்தும் பலனில்லாமல் எடியூரப்பா பதவி விலக நேரிட்டது.

* ஏறப்பா... இறங்கப்பா!

கர்நாடக மாநில முதல்வராக முதல் முறையாக கடந்த 2007 நவம்பர் 12ம் தேதி பதவியேற்ற எடியூரப்பா 19ம் தேதி ராஜினாமா செய்ததின் மூலம் 8 நாட்கள் முதல்வராக இருந்தார். இரண்டாவது முறையாக 2008 மே 30ம் தேதி பதவியேற்று 2011 ஆகஸ்ட் 4ம் தேதி வரை 1,158 நாட்கள் முதல்வராக இருந்தார். 3வது முறையாக 2018 மே 17ம் தேதி பதவியேற்று 23ம் தேதி வரை 7 நாட்கள் இருந்தார். நான்காவது முறையாக 2019 ஜூலை 26ம் தேதி பதவியேற்று 2021 ஜூலை 26ம் தேதி வரை 730 நாட்கள் இருந்தார். மொத்தம் நான்கு கட்டங்களில் 1,927 நாள் மாநில முதல்வராக இருந்துள்ளார். ஒருமுறை கூட 5 ஆண்டு பதவி காலத்தை நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Related Stories: