டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்; 3வது சுற்றுக்கு முன்னேறினார் சரத் கமல்: வில்வித்தை காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் 2வது சுற்றில் இந்திய வீரர் சரத் கமல், போர்ச்சுகல் வீரர் தியாகோ அபோலோனியாவை 4-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, 3வது சுற்றுக்கு முன்னேறினார். மேலும் ஆடவர் வில்வித்தை போட்டியில், கஜகஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை டோக்கியோவில் உள்ள மெட்ரோபாலிட்டன் ஜிம்னாசியம் அரங்கில் நடந்த டேபிள் டென்னிஸ் 2வது சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் சரத் கமலும், போர்ச்சுகலின் தியாகோ அபோலோனியாவும் மோதினர். இதில் முதலாவது செட்டை தியாகோ, 11-2 என்ற கணக்கில் கைப்பற்றி, சரத் கமலுக்கு அதிர்ச்சியளித்தார்.

இருப்பினும் மனம் தளராமல் ஆடிய சரத் கமல், 2வது செட்டை 11-8 என்ற கணக்கிலும், 3வது செட்டை 11-5 என்ற கணக்கிலும் கைப்பற்றி, பதிலடி கொடுத்தார். 4வது செட்டில் இருவரும் சளைக்காமல் போராடினர். இறுதியில் அந்த செட்டை தியாகோ 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார். 5வது செட்டை 11-6 என்ற கணக்கில் சரத் கமல் எளிதாக கைப்பற்ற, போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது. 6வது செட்டில் தோல்வியை தவிர்க்க, தியாகோ கடுமையாக போராடினார். அந்த செட்டில் இருவருமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும் அந்த செட்டை 11-9 என்ற கணக்கில் சரத் கமல் கைப்பற்றி, வெற்றிக்கனியை பறித்தார்.

2-11, 11-8, 11-5, 9-11, 11-6, 11-9 என 4-2 என்ற செட் கணக்கில், தியாகோவை வீழ்த்தியதன் மூலம், நடப்பு ஒலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையரில் சரத் கமல் 3வது சுற்றுக்குள் நுழைந்தார். டேபிள் டென்னிசில் முன்னணி நட்சத்திரமான சீன வீரர் மா லாங்குடன், 3வது சுற்றில் சரத் கமல் மோதவுள்ளார்.

சுதிர்தா முகர்ஜி தோல்வி

டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜியும், போர்ச்சுகல் வீராங்கனை  ஃபூ யூவும் மோதினர். இதில் ஃபூ யூ 11-3, 11-3, 11-5, 11-5 என நேர் செட்களில் சுதிர்தா முகர்ஜியை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

வில்வித்தையில் அபாரம்

ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய ஆடவர் அணி, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றில், இந்திய வில்வித்தை வீரர்கள் அதானு தாஸ், பிரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் அணி 6-2 என்ற புள்ளி கணக்கில், கஜகஸ்தானின் அப்துல்லின் இல்ஃபத், கான்கின் டெனிஸ் மற்றும்ட முசாயேவ் சன்ஷர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related Stories: