அதிமுக ஆட்சி ஊழல், முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், உ.வாசுகி, பி.சம்பத்  உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து, கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

அமெரிக்க ஏகாதிபத்திய அரசினை கண்டித்து வரும் 29ம்தேதி சென்னையில், அமெரிக்க தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய பாஜ கூட்டணி அரசு தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறது. சொந்த நாட்டு மக்களையே உளவு பார்க்க அந்நிய நாட்டு உளவு அமைப்பை பயன்படுத்தி பெகாசஸ் மென்பொருள் மூலம் வேவு பார்த்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. வேளாண் துறையை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூட ஒன்றிய அரசும், பிரதமரும் தயாராக இல்லை. இத்தகைய ஒன்றிய நரேந்திர மோடி அரசின் ஜனநாயக விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், மக்கள் நலன் காக்கவும் தொடர்ந்து போராடுவது என தீர்மானித்துள்ளோம்.  

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு இந்திய மக்களை பெரும் துயரத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே சில்லரை எரிபொருள் வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதித்துள்ள மோடி அரசு தற்போது மொத்த விற்பனையையும் அவர்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை திணிப்பது போன்ற ஒன்றிய பாஜ கூட்டணி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.  தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு அனைத்து வகைகளிலும் மதவெறி பாஜகவுக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டது.

அனைத்து துறைகளிலும் ஊழலும், முறைகேடுகளும் நீக்கமற நிறைந்திருந்தது. அனைத்து பணி நியமனங்களும், இடமாறுதலும் பண அடிப்படையிலேயே நடைபெற்றது. ஆட்சியிலிருந்த காலத்திலேயே முதல்வர், துணை முதல்வர், பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் எழுந்து நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில் முந்தைய ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல், முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களை தண்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட தமிழகத்தின் உரிமையை மீட்பது உள்ளிட்ட தமிழக மக்களின் நலன் காக்க தொடர்ந்து போராடுவது என முடிவு செய்துள்ளோம்.  இவ்வாறு கூறினார்.

Related Stories: