3 நாள் அரசு பயணமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டார் மேற்கு வங்க முதல்வர் மம்தா: நாளை மறுநாள் பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள் அரசு பயணமாக விமானத்தில் டெல்லி புறப்பட்டார். மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசின் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்டது. அதில், சட்டமன்ற மேலவை அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானங்கள் குறித்து, முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி,  மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

நாளை மறுநாள் அவர் பிரதமர் மோடியை சந்தித்து, மாநில திட்டங்கள், தீர்மானங்கள் குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்குவது குறித்து, அவர்களிடம் மம்தா பானர்ஜி பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன், மாநில தியாகிகள் தினத்தில் பேசிய மம்தா, தேசிய அளவில் தனது கட்சியை விரிவுபடுத்த உள்ளதாகவும், அதனை தொடர்ந்து நடைபெறும் தேர்தல்களில் போட்டியிட உள்ளதாகவும் கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தலைவராக மம்தா தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Related Stories: