நாடு முழுவதும் பதற்றம் எதிரொலி!: துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சியின் பதவி பறிப்பு.. நாடாளுமன்றத்தையும் முடக்கி அதிபர் கயீஸ் உத்தரவு..!!

டியூனிஸ்: துனிசிய பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சியை பதவி நீக்கம் செய்துள்ள அந்நாட்டு அதிபர் கயீஸ்,   நாடாளுமன்றத்தையும் முடக்கி உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும் வகையில் துனிசியாவில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொற்று கட்டுக்குள் வராத காரணத்தால் பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சி கட்டுப்பாடுகளை விலக்கவில்லை. இந்நிலையில் பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் முடங்கியதால் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி துனிசியா முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நாட்டின் பொருளாதாரத்தை உடனே மீட்டெடுக்க வலியுறுத்தி இளைஞர்களும் ஓரணியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.

தலைநகர் துனிசில் வெடித்த போராட்டங்கள் நபியூல், சவுசி, கெய்ரோவான், டியூசியோர் உள்ளிட்ட இடங்களுக்கும் பரவியது. பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே போராட்டங்கள் வெடித்தன. அரசியல் கட்சியின் அலுவலகங்கள் இளைஞர்களால் சூறையாடப்பட்டன. இதையடுத்து நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டதை அடுத்து அதிபர் கயீஸ்  சயீத் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.  இதை தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசிய அதிபர் கயீஸ், பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சியை பதவிநீக்கம் செய்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தை முடக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, தேசிய அளவிலான பதற்றம் எதிரொலியாக நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு சட்டப்படி நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை. இதனால் நாடாளுமன்றத்தை முடக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  புதிய பிரதமரை தேர்வு செய்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதிபர் கயீசின் அறிவிப்பை அடுத்து முக்கிய சாலைகளில் கூடிய பொதுமக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர். புதிதாக நியமிக்கப்பட இருக்கும் பிரதமர் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி சரிந்து கிடக்கும் துனிசிய பொருளாதாரத்தை புனரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: