பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் செல்போன் ஒட்டு கேட்புக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது: பிரான்ஸ் அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் கைவிரிப்பு

ஜெருசலேம்: ‘பெகாசஸ் மூலம் தலைவர்களின் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்படும் காலக்கட்டத்தில் நான் ஆட்சிப் பொறுப்பில் இல்லை,’ என்று பிரான்ஸ் அதிபரிடம் இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.  உலகின் பல நாடுகளிலும் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் தயாரித்த இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த, பல நாட்டு அதிபர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்களிடம் என 50 ஆயிரம் பேரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது 15 அமைச்சர்களின் செல்போன்களை மொராக்கோ நாட்டு பாதுகாப்பு படையினர் ஒட்டு கேட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை கூட்டி பிரான்ஸ் அதிபர் மெக்ரான் நடத்தினார். இதைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது, ‘இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு, விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மெக்ரான் வலியுறுத்தி உள்ளார். அதற்கு இஸ்ரேல் பிரதமர் பென்னட், ‘குற்றச்சாட்டு கூறப்படும் காலகட்டத்தில் தான் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இருந்தாலும், இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்பட்டதும் அது குறித்து தெரிவிக்கிறேன்,’ என உறுதி அளித்துள்ளார். அதே சமயம், பிரான்ஸ் அதிபர் செல்போன் ஒட்டு கேட்கப்பட்டதை மொராக்கோ அரசு மறுத்துள்ளது. இந்த விஷயத்தில் பிரான்ஸ் அரசோ, அதிபர் மெக்ரானோ குறிவைக்கப்படவில்லை என்பதை என்எஸ்ஓ நிறுவனமும் உறுதியாக கூறி உள்ளது.

Related Stories:

>