பஞ்சாப்பை தொடர்ந்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ், ஆட்சியில் அதிரடி மாற்றங்கள்: உட்கட்சி பூசலுக்கு தீர்வு காண மேலிடம் முயற்சி

ஜெய்ப்பூர்: பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர், சித்துவுக்கு இடையிலான மோதலுக்கு தீர்வு கண்டதை தொடர்ந்து,  ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் தலைமை கவனம் செலுத்த தொடங்கி உள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு இவருக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதலால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இம்மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் நீடித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் தீர்வு ஏற்படவில்லை. பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், முன்னாள் அமைச்சர் சித்துவுக்கும் இடையிலான மோதலுக்கு சமீபத்தில் தீர்வு கண்டதை தொடர்ந்து, ராஜஸ்தானில் கவனம் செலுத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.   

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான அஜய் மக்கன், அகில காங்கிரஸ் செயலாளர் வேணுகோபாலிடம் ராஜஸ்தான் உட்கட்சி பூசலுக்கு தீர்வு காணும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஜெய்ப்பூர் வந்த இவர்கள், கட்சி அலுவலகத்தில் உயர்மட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அஜய் மக்கன் அளித்த பேட்டியில், ‘‘ராஜஸ்தான் காங்கிரசில் எந்த குழப்பமும் இல்லை. விரைவில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும். அதேபோல், கட்சியிலும் நிறைய மாற்றங்கள் இருக்கும். மீண்டும் ஜூலை 28ம் தேதியன்று ஜெய்ப்பூரில் இது தொடர்பான ஆலோசனை நடைபெறும். கட்சி தலைமையின் முடிவை அனைவருமே ஏற்றுக் கொள்வார்கள்,’’ என்றார்.

* சச்சினுக்கு மீண்டும் பதவி

கெலாட் அமைச்சரவையில் சச்சின் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். கடந்தாண்டு இவர் கெலாட்டுக்கு எதிராக கிளம்பி, தனது ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேருடன் பாஜ.வுக்கு தாவ முயற்சித்தார். அப்போது, அவரிடம் இருந்த 2 பதவிகளையும் கட்சி மேலிடம் பறித்தது. பின்னர், அவரை சமாதானம் செய்து கட்சியில் தொடர செய்தது. தற்போது, அவருக்கு மீண்டும் இதே பதவிகள் வழங்கப்பட்டு, உட்கட்சி பூசலுக்கு மேலிடம் தீர்வு காணும் என பேச்சு அடிபடுகிறது. மேலும், இவருடைய ஆதரவு எம்எல்ஏ.க்கள் சிலருக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் பதவி வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

Related Stories: