லண்டனில் நவாஸ் ஷெரீப்புடன் சந்திப்பு விவகாரம்; ‘பாகிஸ்தான் ஒரு விபசார விடுதி’- ஆப்கான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சால் சர்ச்சை

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து பேசியதற்காக, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கியதால் அந்நாட்டு நீதிமன்றத்தால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனால், தனது பதவியை இழந்த அவர், நீதிமன்றம் அளித்த அனுமதியின் பேரில், கடந்த 2019ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் மருத்துவ சிகிச்சைக்காக தங்கி உள்ளார். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசரான ஹம்துல்லா மொஹிப், லண்டனில் உள்ள நவாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆப்கன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‘பாதுகாப்பு ஆலோசகர் மொஹிப், ஆப்கன் அமைச்சர் சாயித் சதத் நாதெரி ஆகியோர், லண்டனில் நவாஸ் ஷெரீபை சந்தித்து பேசினார் என்று தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஆப்கன் பாதுகாப்பு ஆலோசகரான மொஹிப், ‘பாகிஸ்தான் ஒரு விபசார விடுதி’ என வர்ணித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மொஹிப் - நவாஸ் செரீப் சந்திப்பு பாகிஸ்தான் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான அமைச்சர்கள், நவாஸ் ஷெரீபுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

தகவல் தொழில்நுட்ப அமைச்சரான பவத் சவுத்ரி வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானின் ஒவ்வொரு எதிரியும், நவாஸ் ஷெரீப்புக்கு நண்பர்’ என்று கூறியுள்ளார். இருந்தும் நவாஸ் ஷெரீப்பின் மகள் மர்யம் நவாஸ் கூறுகையில், ‘எனது தந்தை நல்லெண்ண அடிப்படையிலேயே ஆப்கான் அதிகாரிகளை சந்தித்தார். அண்டை நாட்டினருடன் நட்புறவை பேணவே இச்சந்திப்பில் அவர் கலந்து கொண்டார்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: