பழநி அருகே வினோத நோயால் சிறுவன் பரிதவிப்பு: உதவிக்கரம் நீட்ட பெற்றோர் கோரிக்கை

பழநி: பழநி அருகே வினோத நோயால் அவதிப்படும் 13 வயது சிறுவனுக்கு உதவிக்கரம் நீட்ட பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே மானூரைச் சேர்ந்தவர் காட்டப்பன். பிட்டர் தொழிலாளி.  மனைவி செல்வி. மகன் காவியபாலன் (13). சிறுவன் காவியபாலன் பிறந்தது முதலே வினோதமான நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். உடல் முழுவதும் தீக்காயம் பட்டதுபோல் இருப்பதால், இதர குழந்தைகளிடமிருந்து பிரிந்து தனித்து வாழும் நிலைக்கு ஆளாகி உள்ளார். இதுகுறித்து காவியபாலனின் தந்தை காட்டப்பன் கூறியதாவது: மனித உடம்பில் தோல்கள் பல அடுக்குகளால் அமைந்திருக்கும். எனது மகனுக்கு ஒரு அடுக்கு தோல் மட்டுமே உள்ளது. 

சிகிச்சைக்காக பல இடங்களுக்கு அலைந்து விட்டோம். லட்சக்கணக்கில் செலவழித்து விட்டோம்.  எந்த முன்னேற்றமும் இல்லை.  தற்போது எனது மகன் 8ம் வகுப்பு படிக்கிறான். வினோத நோயால் உடன் படிக்கும் சிறுவர்கள் இவனை ஒதுக்குகின்றனர். இவனை கவனிப்பதற்காகவே வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே மளிகை பொருட்களை வாங்கி, வியாபாரம் செய்து வருகிறோம். கிடைக்கும் வருவாய் உணவிற்கே பற்றாக்குறையாக உள்ளது. இதனால் சிகிச்சையை தொடர முடியவில்லை. ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வலர்கள் எனது மகனுக்கு சிகிச்சை அளிக்க உதவி புரிய வேண்டும். நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். மனைவி செல்வி பிஏ படித்துள்ளார். இருவரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உதவிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார். உதவிக்கு : 97865 92966 (காட்டப்பன்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். 

Related Stories:

>